இலங்கை- மேற்கிந்திய தீவு முதல் ஆட்டம் கொழும்பில்

இலங்கை- மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று 22ம் திகதி கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. தொடரின் 2வது போட்டி 26ம் திகதி ஹம்பாந்தோட்டையிலும், 3வது போட்டி மார்ச் மாதம் 1ம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இத்தொடருக்கு முன் மேற்கிந்திய அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரை 2-−1 என்ற ரீதியில் இழந்தாலும் அத்தொடரில் தோல்வியுற்ற இரு போட்டிகளிலும் கடும் போராட்டத்துக்கு மத்தியிலேயே தோல்வியுற்றோம். இத்தொடரில் எமது பந்து வீச்சாளர்கள் நடுவரிசை துடுப்பாட்ட வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதில் பின்னடைவைச் சந்தித்தனர்.

உங்கள் அணி வெற்றியின் விளிம்புக்கே வந்த பல சந்தர்ப்பங்களில் தோல்வியுற்றுள்ளது. இதை நிவர்திக்க உங்கள் அணியின் பந்து வீச்சா அல்லது துடுப்பாட்டமா முன்னேற்றமடைய வேண்டும் என்ற ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த பீல் சீமன்ஸ் “உண்மையில் இந்தியாவுடன் நடைபெற்ற தொடரில் நாம் தோல்வியுற்றாலும் அத்தொடரில் சிறப்பாக விளையாடினோம். ஆனால் அத்தொடரில் எமது பந்துவீச்சில் குறைபாடுகள் உள்ளதை அவதானித்தேன். இலங்கையுடனான தொடரில் பந்துவிச்சு குறைபாடுகளை நிவர்த்திக்க அது பற்றி கூடிய கவனம் செலுத்துவுள்ளோம். கடந்த ஒரு மாதகாலமாக பந்து வீச்சு பயிற்சிகளில் ஈடுபட்டோம். நாம் இங்கு வந்து இலங்கை மைதானங்களிலும் கூடுதலாக பந்து வீச்சுப் பயிற்சிகளையே பெற்றுள்ளோம். நடுவரிசைத் துடுப்பாட்ட வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதே எமது இலக்கு” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

‘கடைசி மூன்று மாத காலத்தில் வெள்ளை பந்தில் விளையாடும் அணிகள் முன்னேறியுள்ளது. இந்திய அணியுடனான தொடரை விட இதில் சிறப்பாகச் செயற்பட்டால் இத்தொடரை வெல்லும் சந்தர்ப்பம் உள்ளது. எமது அனைத்து வீரர்களின் எதிர்பார்ப்ம் அதுவே” என பீல் சீமன்ஸ் தெளிவுபடுத்தினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் கிரான் பொலார்ட்: “இங்குள்ள காலநிலைக்கு நாம் பழக்கப்பட்டு வருகிறோம். இங்கு தற்போது உஷ்ணமான காலநிலை நிலவுவதால் முன் கூடியே இங்கு வருவதற்குத் தீர்மானித்தோம். உண்மையில் இலங்கை காலநிலை உடல் ரீதியாவும், உள ரீதியாகவும் சவாலாய் அமையும் என நாம் அறிந்திருந்தோம். அதனால் இங்கு வந்து பல பயிற்சி முகாம்களை நடத்தி சிறந்த பயிற்சிகளைப் பெற்றுள்ளோம். நாம் நினைத்தது போல் இங்கு கடின உஷ்ணமான காலநிலை காணப்படுகிறது.

ஆனால் எமது கரீபியன் தீவுகளில் உள்ளது போல் செவ்விளநீரையும், பழவகைகளையும் உணவாகக்கொண்டு உஷ்ணத்தை பராமரிக்கக் கூடியதாகவிருந்தது” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமது அணியின் ஆயத்தங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்த இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன: 20 சிரேஷ்ட வீரர்களையும், இளம் வீரர்களையும் கொண்ட கலவையான அணியாக எமது அணியுள்ளதாகவும், தேவைக்கேற்றவாறு வீரர்களை நியமித்து சிறந்த ஒரு அணியை களமிறக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த பாகிஸ்தான் தொடருக்கு சில சிரேஷ்ட வீரர்கள் இடம் இல்லையென்றாலும் அத்தொடரில் பங்குபற்றிய புதிய இளம் வீரர்கள் சிறந்த முறையில் தமது திறமையை வெளிப்படுத்தியதால் அணிக்கு மேலும் பலம் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார். பெயரிடப்பட்டுள்ள 20 வீரர்களும் இதுரை நல்ல முறையில் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் ஒரு சிறந்த அணி. கடந்த காலங்களில் அவர்கள் மிகவும் சிறந்தமுறையில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதேபோல் சிறந்த சிரேஷ்ட வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். உண்மையில் இது சிறந்த தொடராக அமையவுள்ளது. இரு அணி வீரர்களுக்கும் சவால்மிக்க ஒரு தொடராக இது அமையவுள்ளது என திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.

Sat, 02/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை