இருண்ட யுகம் மீண்டும் வராமல் தடுக்கும் துணிச்சல் எமக்கு வேண்டும்

நாட்டில் இருள் சூழ்ந்த யுகம் மீண்டும் வந்துவிடாமல் பாதுகாத்துக்ெகாள்ளும் துணிச்சலை வரவழைத்துக்ெகாள்ள வேண்டிய காலகட்டத்தில் துணிச்சலுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த ஊடகவியலாளர்களான எப்.எம். பைரூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மீடியா போரத்தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம்,

மறைந்த ஊடகவியலாளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் செயலாளர் எப்.எம். பைரூஸ், முன்னாள் பொருளாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் அவர்களுக்குரிய பாணியில், மிக இலாவகமாக இந்த இருண்ட யுகத்தை கடந்து சரித்திரத்தில் தடம்பதிக்கும் சமூகப் பணியை செய்திருக்கிறார்கள்.

தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களின் பட்டியலில் முக்கியமான இருவர் இன்றைய நிகழ்வில் நினைவுகூரப்படுகின்றனர். ஊடகவியலாளர் எப்.எம். பைரூஸ் எனது குடும்ப நண்பர். எஸ்.டி. சிவநாயகத்தின் காலத்தில் எனது மூத்த சகோதரர் டொக்டர் ஹபீஸ் தினபதி பத்திரிகையில் வேலை செய்தார். அவருடன் தினபதி ஆசிரியர்பீடத்தில் வேலை செய்தவர்தான் மறைந்த எப்.எம். பைரூஸ்.

நண்பர் ஐயூப் பேசும்போது அவர் நெறிமுறை பிறழாத ஊடகவியலாளர் என்று கூறினார். அவர் ஒரு நேர்மையான மனிதரும் கூட. சமூகம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எப்.எம். பைரூஸை நாம் காணமுடியும். ஊடகவியலார்களை பயிற்றுவித்து, ஊக்குவித்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றிய ஒருவரை நாம் இப்போது இழந்து நிற்கிறோம்.

அதுபோலத்தான் நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியும். அவரது அந்திம நாட்களில் சிலரிடம் என்னை விசாரித்தது மாத்திரமல்லாது, தற்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் என்னுடன் கதைக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால், எனக்கு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது ஜனாஸா நல்லடக்கத்தில்கூட கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் அவருக்கு நான் செலுத்துகின்ற கடனாக, இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்று சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியான இருண்ட யுகத்தை நாங்கள் தாண்டிவந்திருக்கிறோம். எதிர்காலங்களிலும் இப்படியான சூழல் உருவாகி, அடிமை நிலைமைக்குள் தள்ளப்படாமல் இருப்பதற்கு எங்களுக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும்.

துணிச்சல் என்று வருகின்றபோது எதிலும் போராடாமல் ஒன்றும் கிடைக்காது. அது அரசியல்வாதிகளுக்கும் சாதாரண சிவில் சமூகத்துக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

 எம்.ஏ.எம். நிலாம்

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை