விவசாயிகள் நஞ்சு கலந்த உணவுகளை வழங்கும் நிலையை மாற்ற வேண்டும்

உரத்தட்டுப்பாட்டிற்கு கடந்த அரசே காரணம் - அமைச்சர் சமல் ராஜபக்ஷ

கடந்த அரசாங்கம் உரக் கம்பனிகளுக்கு செலுத்த வேண்டிய 2300 கோடி ரூபாவினை செலுத்தாமையே நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பிரதான காரணமாகுமென அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் பதகிரிய கிராமத்தில் நாட்டை கட்டியெழுப்பும் சபீட்சமான யுகம் எனும் திட்டத்திற்கு அமைய வடிகாலமைப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வடிகாலமைப்பு சௌபாக்கியம் திட்டத்திற்கு அமைய குளங்களை அபிவிருத்தி செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் (10) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்குதொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இதில் 600 கோடி ரூபாவினை மீளச் செலுத்தி நிலைமையினை ஓரளவு சீர் செய்தோம். நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கான முழுப் பொறுப்பினையும் கடந்த அரசாங்கம் ஏற்க வேண்டும்.

தற்பொழுது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாம் செயற்கை உரத்தினை பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளோம்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்களுக்கு ஏற்ப நாட்டு மக்களுக்கு நஞ்சு கலந்த விவசாய உற்பத்திகளை வழங்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாக நாம் இனங் காணப்பட்டுள்ளோம்.

எமது நாட்டு விவசாயிகள் எமக்கு நஞ்சு கலந்த உணவுகளையே வழங்கிவருகிறார்கள். இந்த நிலைமையினை நாம் மாற்றியமைக்க வேண்டும். இரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து விடுபட்டு செயற்கை உரப் பயன்பாட்டினை ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் தொகையும் அதிகரித்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப அறிவினை வழங்க வேண்டும்.

நாம் பயிர் செய்யக் கூடிய அதிகமான விவசாய உற்பத்திகளுக்கு பெரும் தொகை பணத்தினை செலவுசெய்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். இந்த நிலைமையினை மாற்றியமைப்பதற்காக உள்நாட்டு விவசாய உற்பத்திகளை ஊக்குவித்து கட்டியெழுப்பவேண்டும். இத்தோடு வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் தொடர்பான எமது சிந்தனையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

கடந்தஅரசாங்ககாலத்தில் விவசாய அமைச்சின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. நாம் இந்த நிலைமைகளை மாற்றியமைத்து வீண் செலவுகளை குறைத்து மக்கள் பணத்தினை பாதுகாத்து வருகிறோம் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை