இரண்டு நாள் மோதலின் பின் காசாவில் அமைதி திரும்பியது

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஜிஹாத் போராளிகளுக்கு இடையே இரண்டு நாட்கள் நீடித்த மோதலுக்குப் பின் எகிப்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்–காசா எல்லையில் போர் நிறுத்தம் ஒன்று அமுலுக்கு வந்துள்ளது.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இஸ்ரேலை நோக்கி 80 ரொக்கெட் குண்டுகளை வீசியதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் காசா மற்றும் சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் அந்தப் போராட்டக் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

எனினும் அதிக ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலின் பாதுகாப்பு கவசம் மூலம் இடைமறிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் தரப்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இஸ்ரேலில் ஓர் ஆண்டுக்குள் மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எகிப்து மற்றும் ஐ.நா மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதிற்கு இடையே “பரஸ்பரம் மற்றும் சமகாலத்தில் போர் நிறுத்தம்” ஒன்று எட்டப்பட்டதை அடுத்து அமைதி திருப்பியதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த சுற்று முடிந்து விட்டது. சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் ஒவ்வொரு ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் பதில் கொடுக்கப்படும் என்று பலஸ்தீன போராட்டம் அதன் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறது” என்று இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரான காதர் ஹபிப் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

மோதல் ஆரம்பமானதை அடுத்து மூடப்பட்ட காசா எல்லையை ஒட்டிய வீதிகளை இஸ்ரேல் நேற்று மீண்டும் திறந்ததோடு அந்த பகுதிகளில் ரயில் போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் மனிதாபிமான செயற்பாடுகள் தவிர்த்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு காசா எல்லைக் கடவை தொடர்ந்து மூடி இருப்பதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. பலஸ்தீன மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே முழு அளவிலான மோதல் ஒன்று வெடித்ததன் பின் சிறு அளவில் மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

Wed, 02/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை