இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் வளங்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும்

மோடியிடம் வலியுறுத்தியதாக டக்ளஸ் தெரிவிப்பு

இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் வளங்களையும், பாதிப்புக்குள்ளாகும் உபகரணங்களிற்கும் ஈடாக நட்ட ஈடு வழங்க உதவி செய்ய வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள்விடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நீர்வள தொழில்சார் மாதர் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழிலினால், எமது வளங்கள் அழிக்கப்படுகின்றது. அதேநேரம், இரண்டு தரப்பிற்கும் உகந்ததற்றதாகவும், போதைப் பொருட்களை கடத்தி வருகின்றதாகவும் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

அவர்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்ற அதேநேரத்தில், மாற்றுத் தொழிலை ஏற்பாடு செய்ய குழு ஒன்றை நியமிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளேன்.

இலங்கையைச் சேர்ந்த அமைச்சு மட்டத்தின் செயலாளர்கள், 7 பேர் கொண்ட பல்கலைக்கழகத்தினர், புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்து, அதனை ஆராய வேண்டும். இரு தரப்பினர்களுக்கும் இடையில் அழிவுகள் ஏற்படாத வகையில், தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றக் கூடிய வகையில், வளங்களைப் பாதுகாத்து அவர்கள் முன்னேறக் கூடிய வகையில், எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளோம்.

அவர் அதனை வரவேற்றிருக்கின்றார். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலினால், எமது வளங்கள் அழிகின்றதுடன், மீனவர்களின் உபகரணங்களும் அழிக்கப்படுகின்ற காரணத்தினால், அதற்கொரு நஸ்டஈடு போல உதவியைச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதேநேரம், நேற்று முன்தினம் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 11 பேர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக மீனவர்களின், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், வளங்களும் சூரையாடப்படுகின்றதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், படகுகளை நீதிமன்றத்தினால், அரச உடமையாக்குவதனால், இழப்புக்களை சந்திப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவ்வாறு அவர்கள் குற்றஞ்சாட்ட முடியாது.

அவர்களினால் தான், தமிழக மீனவர் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி, நுழைந்தால், அவர்களின் படகுகளை அரச உடமையாக்குவது தொடர்பாக, 2019 ஆம் ஆண்டு யூலை மாதத்திற்குப் பிறகு, வெளிநாட்டு படகுகள் வருவது தொடர்பாக சட்டம் ஒன்றை இயற்றியிருக்கின்றோம் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை