முதல் ஒருநாள் போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கேப் டவுனில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும் விளையாடி வருகின்றது. இதில், முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தென்னாபிரிக்க அணியை மண் கவ்வ வைத்தது.

இந்நிலையில், புதிய தலைவரான குயின்டன் டி கொக் தலைமையில் தென்னாபிரிக்கா முதலாவது ஒருநாள் போட்டியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதிகபட்சமாக நடுவரிசைத் துடுப்பாட்ட வீரர் ஜோ டென்லி 87 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தென்னாபிரிக்க பந்துவீச்சில், ஷம்ஸி 3 விக்கெட்டுக்களையும், ஹென்ரிக்ஸ், ஸ்முட்ஸ், பெஹ்லுக்வாயோ, சிபாம்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

259 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் தொடக்க ஓட்டக்காரர்களில் ஒருவரான ரீஸா ஹென்ரிக்ஸ் 6 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களம் நுழைந்த டெம்பா பவுமா அணித்தலைவர் குயின்டன் டி கொக்குடன் இணைந்து அணியை வெற்றிப் பாதை நோக்கி நகர்த்தினார்.

சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 15 ஆவது சதத்தைப்பூர்த்தி செய்த குயின்டன் டி கொக், 107 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பவுமாவும் இரண்டு ஓட்டங்களால் சதத்தைத் தவற விட்டார்.

இறுதியில் தென்னாபிரிக்க அணி 47.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் நாயகனாக குயின்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்கா 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி டேர்பன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை