பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு அக்கறை காட்டவில்லை

தேர்தலின் பின் தெரிவாகும் தமிழ் பிரதிநிதிகளுடன் பேச்சு

கடன்களைத் திருப்பிச் செலுத்த இந்தியா காலஅவகாசம் தர வேண்டும்

இந்துவுக்கு பிரதமர் பேட்டி

தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இலங்கையின் பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாத சிலவற்றை அவர்கள் இப்போது கேட்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் என்பவற்றின் பின்னர் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசுவதற்கு ஒரு அணியை நியமித்து யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாக குறிப்பிட்ட  பிரதமர், 13ஆம் திருத்தம், அதிகார பகிர்வு என அனைத்தையும் பற்றி பேசலாம் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் பிரதேசங்களுக்கான பொறுப்பை ஏற்கக் கூடிய தமிழர்களின் பிரதிநிதிகளை எதிர்காலம் பற்றி எம்முடன் பேச வருமாறு அழைக்கலாம் என்றும் கூறிய அவர், 30 வருட காலம் அபிவிருத்தி இன்றி இருக்கும் வடபகுதி மக்கள் வாழும் பிரதேசங்கள் தான் முதலில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அந்நாட்டு முக்கிய தலைவர்களை சந்தித்தார். இந்த விஜயத்தின் போது இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் 13 ஆவது திருத்தம், அதிகாரப்பகிர்வு என்பன பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். தொடந்து கருத்துத் தெரிவித்த அவர், வீடமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதியுதவியை கேட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு இந்தியாவும் உதவும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கம் காட்டும் அக்கறை பற்றி இந்தியா எதிர்பார்ப்புடன் இருப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், இந்தியாவின் எதிர்பார்ப்பினை நாம் எப்போதும் புரிந்து வைத்துள்ளோம். தோல்வி அடைவோம் என்று தெரிந்திருந்தும் வடக்கு தேர்தலை நாம் நடத்தினோம். தேர்தல்களின் பின்னர் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசுவதற்கு நாம் ஒரு அணியை நியமித்து யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளோம் என்றார்.

13ஆம் திருத்தச் சட்டம், அதிகார பகிர்வு பற்றி பேசுவதற்காக செல்லப்போகிறீர்களா என்று வினவியதற்கு பதிலளித்த அவர், அவை அனைத்தையும் பற்றி பேச வேண்டும். நாம் முன்னே செல்ல வேண்டும். ஆனால் நாம் பேசுபவர்கள் தமிழ் பிரதேசங்களுக்கான பொறுப்பை ஏற்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தேர்தலின் பின்னர் தமிழர்களின் பிரதிநிதிகளை எதிர்காலம் பற்றி எம்முடன் பேச வருமாறு அழைக்கலாம் என்றும் தெரிவித்தார். இப்போதைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இலங்கையின் பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாத சிலவற்றை அவர்கள் இப்போது கேட்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்ததோடு உலகளாவிய ரீதியில் தேசிய கீதம் ஒரு பாஷையில் மட்டுமே பாடப்படுகிறது. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஆனால் உள்ள தேசிய நிகழ்வுகளில் ஒரு பாஷையில்தான் தேசிய கீதத்தை பாடுகிறீர்கள். எமது நிலைப்பாடும் அதுதான். யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதத்தைப் பாட விரும்பினால் எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சில அரசியல்வாதிகள்தான் இந்த விடயத்தை பெரிதாக்குகின்றனர். இந்த விடயத்தில் பொது மக்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என்றும் கூறினார்.

19 ஆவது திருத்தம் பற்றி கருத்து தெரிவித்த அவர்,

முதலில் நாம் 19ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். அதன்பின் எவ்வாறு முன் கொண்டு செல்வது என்பது பற்றி யோசிக்க வேண்டும். முன்னாள் நீதி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அது பற்றி ஆராய்ந்து வருகிறார். தற்போதைய அரசியலமைப்பு மற்றும் 19ஆம் திருத்த சட்டம் வகுக்கப்பட்டுள்ள நிலையில் எம்மைப் போன்ற இரு சகோதரர்கள் மட்டுமே இந்த நிலைமையை கையாள முடியும். இல்லையேல் எந்தவொரு ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நிலையில் எப்போதுமே இணக்கத்துடன் செயற்பட முடியாது என்றும் கூறினார்.
(முழுமையான நேர்காணல் 4 ஆம் பக்கம் பார்க்க)

 

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை