ஹேமசிறி, பூஜித் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

ஞாயிறுதோறும் சீ.ஐ.டியில் கையெழுத்திட உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க தவறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

புலனாய்வு அறிக்கைகள் உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் குறித்து போதுமான ஆதாரங்களை பெற்று தந்திருந்தபோதும் அதனை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால்,ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சுமார் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் நேற்று இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பிணையிலும் தலா 2.5 மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் வெளிநாடு செல்வதற்கும் தடைவிதிக் கப்பட்டுள்ளதுடன், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஹேமசிறி முன்வைத்த மனுவை மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ணவும் பூஜித் ஜயசுந்தர பிணை கோரி முன்வைத்த மனுவை மேல் நீதிமன்ற நீதிபதி அதித்யா பட்டபெந்தியும் தனித்தனியே விசாரித்தனர். இதன் பின்னரே இவர்களை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவுகள் நேற்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிறப்பிக்கப்பட்டன.

இதேவேளை மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் இப்பிணைகள் தொடர்பில் சட்ட மாஅதிபர் எதிர்ப்பு தெரிவிக்கலாமென்றும் அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இவ்வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்களான றிசாட் பதியுதீன் எம்.பி, ரவூப் ஹக்கீம் மற்றும் அசாத்சாலி ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வழக்குடன் தொடர்புபட்ட எந்தவொரு சாட்சியங்களுடனும் இவர்கள் தொடர்புகளைப் பேண முடியாதென்றும் மாதாந்தம் வரும் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிக்குட்பட்ட காலப்பகுதியில் சி.ஐ.டி பணிப்பாளர் முன்னிலையில் சென்று கையொப்பமிட வேண்டுமென்றும் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை