கெமரூனில் சிறுவர்கள் உட்பட கிராமத்தினர் எரித்துக் கொலை

வட மேற்கு கெமரூன் கிராமம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்றும் பெரும்பாலானவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்திற்கு எந்தத் தரப்பு பொறுப்பேற்காதபோதும் எதிர்க்கட்சியினர் இராணுவத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

குறித்த பிராந்தியத்தில் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராடிவரும் கெமரூன் அரசு இந்தத் தாக்குதலில் தொடர்புபட்டதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இருப்பதாக ஐ.நா மனிதாபிமான இணைப்பகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வயதுக்கு உட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட பதினான்கு சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வட மேற்கு கெமரூனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் ஒடுக்குமுறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே 2017 ஆம் ஆண்டு பிரிவினைவாத போராட்டம் வெடித்தது. இந்தப் பிரிவினைவாதிகள் ‘அம்பசோனியா’ என்ற தனிநாடு ஒன்றை பிரகடனம் செய்தபோதும் அவர்களை தீவிரவாதிகள் என்று கெமரூன் ஜனாதிபதி போல் பியா கூறிவருகிறார்.

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை