ஐ.தே.கட்சி செயற்குழு திங்கள் வரை ஒத்திவைப்பு

அவசரமாக கூடுகிறது பாராளுமன்ற குழு

பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சமத்துவ மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

ஐ.தே. க தலைமைத்துவத்துக்கும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்குமிடையிலான நெருக்கடி நிலையை முடிவுக்குகொண்டு வரும் வகையிலேயே இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

நேற்று முன்தினம் இரவு ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் சுமார் இரண்டு மணி நேரம் சந்தித்துப் பேசியதன் பின்னரே இந்தச் சந்திப்புக்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்ததாக ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது. சஜித் தலைமையிலான புதிய அரசியல் அணியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய வியூகங்களை முன்னெடுப்பது குறித்து இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமய தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட சமத்துவ மக்கள் சக்தி அணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவிருக்கின்றனர்.

இதேவேளை இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது. அதே சமயம் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டு புதிய அணியின் தேர்தல் சின்னம் தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சமத்துவ மக்கள் சக்தியின் தேர்தல் சின்னம் தொடர்பில் இரு தரப்பும் ஆராய்ந்திருப்பதாகவும் புதியதொரு சின்னத்துக்குப் பதிலாக ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணி பயன்படுத்திய பொதுச் சின்னமான அன்னம் சின்னத்தைப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அறிய வருகின்றது.

அத்துடன் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்ட சரத் பொன்சேகா, அஜித் பி. பெரேரா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரோசி சேனாநாயக்க ஆகிய நால்வரையும் மீள இணைத்துக்கொள்வது தொடர்பில் முடிவு எட்டப்படலாமென தெரிய வருகின்றது.

இவர்களில் அஜித் பி பெரேரா தவிர ஏனைய மூவரையும் மீள இணைப்பதற்கு ரணில் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் அஜித் பி பெரேராவையும் இணைப்பது குறித்து சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் தெரியவருகின்றது. சிலவேளை அஜித் பி பெரேரா நிபந்தனை அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படலாமெனவும் தெரியவருகின்றது.

எம். ஏ. எம். நிலாம்

Fri, 02/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை