சிரிய இராணுவத்தின் தாக்குதலில் துருக்கி படையினர் நால்வர் பலி

சிரியாவின் வடமேற்கு இத்லிப் மாகாணத்தில் சிரியா மற்றும் துருக்கி படைகளுக்கு இடையே இடம்பெற்ற பரஸ்பர தாக்குதல்களில் இரு தரப்பிலும் உயிர்ச் சேதங்கள் இடம்பெற்றுள்ளன.

சிரிய அரச படை நடத்திய செல் வீச்சில் நான்கு துருக்கி படையினர் கொல்லப்பட்டதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 35 சிரிய படையினர் கொல்லப்பட்டதாக அது கூறியது.

எனினும் துருக்கியின் பதில் தாக்குதலில் 6 சிரிய படையினரே கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான இத்லிப் மீது ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய துருப்புகள் நடத்தும் உக்கிர தாக்குதல்களால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

அங்கிருக்கும் பெரும்பாலான பொதுமக்கள் துருக்கி எல்லையை நோக்கியே தஞ்சமடைந்து வருகின்றனர். மோதல்களை தடுப்பதற்காக துருக்கி தனது படைகளை இத்லிப்பில் நிலைநிறுத்தியுள்ளது. எனினும் தாக்குதல்கள் தொடர்பில் இந்தப் படையினருக்கு முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் துருக்கி மற்றும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 2018இல் இத்லிப்பில் மோதலை தடுப்பதற்கு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தானபோதும், அது தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது.

எனினும் தமது வழியில் குறுக்கிட வேண்டாம் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நேற்று ரஷ்யாவை அறிவுறுத்தினார். சிரியாவின் செல் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தபோதே எர்துவான் இவ்வாறு கூறினார்.

“எமது நோக்கம் பற்றி கேள்வி எழுப்புபவர்கள் அவர்கள் செய்த தவறை விரைவில் உணர்ந்துகொள்வார்கள்” என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிய துருக்கி இராணுவத் தொடரணி ஒன்று இத்லிப்பை நோக்கி நகர்ந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த இராணுவ தொடரணியில் பல டஜன் கவச வாகனங்கள், எரிபொருள் டேங்கர் லொரிகள் மற்றும் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை ஏந்திய டிரக் வண்டிகளும் உள்ளடங்குகின்றன. இதிலிப்பை சூழ துருக்கி 12 இராணுவச் சாவடிகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்லிப்பில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இங்கு வந்தவர்களாவர்.

இந்நிலையில் சிரிய அரச படையின் தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 390,000 பேர் வெளியேறி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே 3.5 மில்லியன் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி இருக்கும் துருக்கி சிரியாவின் புதிய தாக்குதல்களால் மேலும் அகதிகள் படையெடுப்பு ஒன்று நிகழும் சூழல் பற்றி அச்சமடைந்துள்ளது.

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை