தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் தீவிரமடையும் கருத்து மோதல்கள்

பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆசனங்களைப் பங்கீடு செய்வது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன.மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கத்துக்கிடையிலேயே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இக்குழப்பநிலையை தணிக்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகவும் அறிய முடிகிறது.தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளாக தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.  

கடந்த முறை நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், இராதாகிருஷ்னண், திலகராஜ் ஆகியோர் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டிருந்தனர்.  

இம்முறையும் மூவரும் போட்டியிட ஆரம்பத்தில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. எனினும் தற்போது கருத்து மோதல்கள் முற்றியுள்ளன.  

நேற்று முன்தினம் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர்பீடச் சந்திப்பில் இராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.கூட்டணிக்குள் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லையென தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் ஒருவர், சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் இராதாகிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோர் கட்டாயம் போட்டியிட வேண்டும் எனவும் கூறினார். மூன்றாவது நபர் யாரென தொழிலாளர் தேசிய சங்கமே தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான பின்புலத்தில் இந்த வாரம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் உயர்பீடம் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Tue, 02/25/2020 - 09:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை