ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நேற்று வெளியேறியது பிரிட்டன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் 47 ஆண்டுகளாக உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன் நேற்று நள்ளிரவுடன் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியது. பிரிட்டனில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த அரசியல் இழுபறிக்குப் பின் இடம்பெறும் இந்த நிகழ்வை, “நம்பிக்கையின் தருணம்” என்று அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரெக்சிட்டுக்கு ஆதரவானவர்கள் மற்றும் ஐரோப்பிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டாட்டங்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்தினர். பிரிட்டனின் இந்த வெளியேற்றம் உடன் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அந்த நாடு நிலைமாற்றுக் காலம் ஒன்றுக்கு முகம்கொடுக்கவுள்ளது. பொருளாதார ரீதியில் எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படாததால் பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் இந்த ஆண்டு இறுதிவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்கும்.

இதனால் எதிர்வரும் டிசம்பர் வரை உறுப்பு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர நடமாட்டம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான சட்டங்கள் பிரிட்டனில் அமுலில் இருக்கும். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பாக 2016 மார்ச் மாதம் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் ஆதரவாக வாக்களித்தபோதும் அதனை நிறைவேற்றுவதில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் வெளியேற்றத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை