புதிய கொரோனா வைரஸினால் ஒரு நாளில் 97 பேர் உயிரிழப்பு

நோய் தொற்றும் வேகத்தில் தணிவு

புதிய கொரோனா வைரஸினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 97 பேர் உயிரிழந்திருப்பதோடு ஒரு நாளைக்குள் இடம்பெற்ற அதிக உயிரிழப்பாகவும் இது பதிவாகியுள்ளது.

இந்த வைரஸினால் சீனாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 908 ஆக அதிகரித்துள்ளது. எனினும் புதிதாக இந்த நோய்த் தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவெங்கும் 40,171 பேருக்கு புதிய வைரஸ் தொற்று இருப்பதோடு 187,518 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜப்பானில் தனிமையில் வைக்கப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் இருக்கும் 60 பேருக்கு புதிய வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தக் கப்பலில் இருக்கும் 3,700 பேரில் 130 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் வைத்து ஒரு பயணிக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் டயமண்ட் பிரின்சஸ் என்ற இந்தக் கப்பல் யொகோஹாமா துறைமுகத்தில் இரண்டு வராங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றிய பயணிகள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த கப்பல் பயணிகளாக உள்ளனர்.

சீனாவின் கணக்கெடுப்புப் படி, 3,281 பேர் வைரஸில் இருந்து சுகம்பெற்று மருத்துமனையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

சீனாவில் சந்திரப் புத்தாண்டுக்குப் பின்னர் மில்லியன் கணக்கான மக்கள் நேற்று வேலைக்குத் திரும்பினர். வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னதாக கடந்த ஜனவரி 31 ஆம் திகதியில் இருந்து இந்த விடுமுறை நிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் வேலை நேரங்களில் மாற்றம் குறிப்பிட்ட வேலை இடங்களை திறப்பது உட்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியாகும்போது கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2003 இல் தொற்றிய சார்ஸ் வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விஞ்சியது. சார்ஸ் பாதிப்பினால் மொத்தம் 774 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் புதிதாக வைரஸ் தொற்றுவோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை குறிப்பிட்டபோதும் வைரஸ் தனது உச்ச தீவிரத்தை வெளியிட்டிருப்பதாக இப்போதே கணிக்க முடியாதுள்ளது என்று எச்சரித்தது.

இந்த வைரஸுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்க உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சர்வதேச குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

ஹுபெய் மாகாணத்தின் தலைநகர் வூஹானில் இந்த வைரஸ் முதல் முறை கண்டுபிடிக்கப்பட்டது. 11 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகர் கடந்த சில வாரங்களாக வெளித்தொடர்பு இன்றி முடக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸை ஒட்டி உலக சுகாதார அமைப்பு கடந்த ஜனவரி 30 ஆம் திகதி உலக சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது.

இந்த வைரஸ் சீனாவுக்கு வெளியில் குறைந்தது 27 நாடுகள் மற்றும் பகுதிகளுக்கு பரவியிருப்பதோடு சீன பெருநிலத்திற்கு அப்பால் பிலிப்பைன்ஸ் மற்றும் ஹொங்கொங்கில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவுக்குச் செல்லாதோர் மூலமும் புதிய கொரோனா வைரஸ்தொற்று பரவுவது, மிகப் பெரிய வைரஸ் பரவலின் அறிகுறியாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது மற்ற நாடுகளில் வைரஸ் பரவல் சிறிய எண்ணிக்கையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் அது வெகுவாக உயரக்கூடும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதே நோக்கம்.

இருப்பினும் உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கத் தயாராகிக்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியது.

இதேவேளை ஹொங்கொங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் இருந்த எந்த பயணிக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேர்ல்ட் ட்ரீம் என்ற இந்தக் கப்பலில் இருந்த எட்டுப் பயணிகளுக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே ஏனைய பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

வைரஸ் தொற்று பரவும் அச்சம் காரணமாக சொகுசு கப்பல்கள் தமது துறைமுகங்களில் தரிப்பதற்கு தென் கொரியா தடை விதித்துள்ளது.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை