ரூ. 367 பில்லியன் பெற்றுக்கொடுக்க குறைநிரப்பு பிரேரணை

ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்களுக்கான கொடுப்பனவு

கடந்த அரசாங்கம் அபிவிருத்தி எனும் பெயரில் ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டிய 367 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந் நிதியை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றை முன்வைப்பதற்கென நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

பாராளுமன்றம் இப் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அமைப்புகளுக்குரிய பணம் மீளச்செலுத்தப்படுமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கடந்த அரசாங்கத்தைப்போல வெறெந்த அரசாங்கமும் பாரிய மோசடி மற்றும் வீண் செலவுகளை மேற்கொள்ளவில்லை. நிதி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் யாவும் மிகவும் கீழ்தரமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

அபிவிருத்தி எனும் பெயரில் அதிகமான வேலைதிட்டங்கள் சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்தக்காரர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. எனினும் அவர்களுக்குரிய பணத்தை முன்னாள் அரசாங்கம் திருப்பிச் செலுத்த தவறிவிட்டது.

இதனால் பல ஒப்பந்தக்காரர்கள் தமது சொத்துக்களை அடகு வைத்தும் பரம்பரை சொத்துக்களை இழக்கும் நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான பணம் திரும்ப வழங்கப்படாவிட்டால் அவர்கள் தற்கொலை வரை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒப்பந்தக்காரர்களுக்கு 155 பில்லியன் ரூபாவும் ஏனைய அமைப்புகளுக்கு 212 பில்லியன் ரூபாவுமாக மொத்தம் 367 பில்லியன் ரூபா நிதியை கடந்த அரசாங்கம் செலுத்த வேண்டியுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கிய அதிக வட்டிக்கான 45 பில்லியனை அரசாங்கம் செலுத்தியிருக்கவில்லை. உர மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டபோதும் உர விநியோகஸ்தர்களுக்கு அதற்குரிய பணம் வழங்கப்படவில்லை. சுகாதார அமைச்சுக்கு தேவையான மருந்துகள் பெற்றுக் கொள்ளப்பட்டபோதும் மருந்து விநியோகஸ்தர்களுக்கான பணம் வழங்கப்படவில்லை.

பெற்றோல், டீசல் கையிருப்புக்கு அங்கீகாரம்

இதேவேளை 2020 மார்ச் 15 ஆம் திகதி முதல் 2020 நவம்பர் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு தேவையான டீசல் 520,000 பீப்பாய்களிலும் பெற்றோல் 680,000 பீப்பாய்களிலும் பெற்றுக் கொள்வதற்காக பெற்றோலியம் அமைச்சு பெற்றோ சைனா இன்டர்நெஷனல் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

அதேபோன்று 2020 மார்ச் 01 ஆம் திகதி முதல் 2020 ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குற்பட்ட காலப்பகுதிக்கு தேவையான 2,240,000 பீப்பாய்களில் டீசலை பெற்றுக்கொள்வதற்காக சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்டர்பிரைஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை