33 மாணவர்களும் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து அழைத்துவரப்பட்டு தியத்தலாவை விசேட இராணுவ மருத்துவ முகாமில் 14நாட்கள் தங்கவைக்கப்பட்டிருந்த 33மாணவர்களும் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து இராணுவத் தலைமையகத்துக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் நடைபெற்ற சினேகப்பூர்வமான சந்திப்பின் பின்னர் தமது வீடுகளுக்கு சென்றதாக இராணுவப் பேச்சாளர் சந்தன விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் கடந்த மாதம் 31ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 33மாணவர்களும் கடந்த 14நாட்களாக தியத்தலாவையில் அமைக்கப்பட்டிருந்த விசேட இராணுவ வைத்திய முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையிலிருந்து 16பேர் கொண்ட விசேட குழுவொன்று வூஹான் நகருக்குச் சென்று இந்த மாணவர்களை இலங்கைக்கு அழைத்துவந்தது. இராணுவத்தினரும், விமானப்படையும் அரசாங்கத்துடன் இணைந்து இவர்களை அழைத்து வருவதற்கான பொறிமுறைகளை கையாண்டிருந்தனர்.

இந்த மாணவர்கள் கொண்டுவந்திருந்த உடைகள், பொருட்கள் என அனைத்தும் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கு மீண்டும் அவை கையளிக்கப்பட்டன. இராணுவ வைத்தியர் பிரிகேடியர் சவீன் மேமசிங்க தலைமையிலான விசேட வைத்திய நிபுணர் குழு இந்த மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனைகளை செய்திருந்தது.

இம் மானவர்கள் 14நாட்கள் கண்காணிக்கப்பட்டமை மற்றும் இவர்களுக்கு எவ்வித வைரஸ் தொற்றுகளும் மருத்துவ பரிசோதனைகளின் பிரகாரம் இல்லையென ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

நேற்றுக் காலை, மாணவர்கள் தியத்தலாவையிலிருந்து அக்குரேகொட இராணுவத் தலைமையகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இது குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்கிரமசிங்கவிடம் வினவிய போது,

33மாணவர்களும் தியத்தலாவையிலிருந்து அக்குரேகொட இராணுவத் தலைமையகத்துக்கு காலை அழைத்துவரப்பட்டிருந்தனர். மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு எவ்வித வைரஸ் தொற்றுகளும் இல்லையென ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

மாணவர்கள் இராணுவத் தளபதியுடன் சினேகப்பூர்வமான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, இக்கட்டான சூழலில் தம்மை இலங்கைக்கு அழைத்துவர அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இராணுவத்தினர், விமானப் படையினர், சீனாவிலுள்ள இலங்கைக்கான தூதுவர், இலங்கையில் உள்ள சீனத் தூதுவர், சீன அரசாங்கம் உட்பட தங்களை இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகளை எடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இராணுவத் தளபதியிடம் மாணவர்கள் கூறினர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 02/15/2020 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை