சீனாவுக்கு வெளியே முதல் கொரோனா பலி; இதுவரை 305 பேர் காவு

சீனாவுக்கு வெளியே முதல் கொரோனா பலி; இதுவரை 305 பேர் காவு-1st Coronovirus Death outside China-at Philippines

- வூஹானிலிருந்து வந்த 44 வயது நபர் பிலிப்பைன்ஸில் பலி
- சீனாவில்: 304 பேர் பலி; 14, 380பேருக்கு தொற்று
- 205 பேர் குணமடைவு

கொடிய கொரோனா வைரஸினால் சீனாவுக்கு வெளியே முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

44 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, பிலிப்பைன்சுக்கான உலக சுகாதார நிறுவன பிரதிநிதி ரபீந்திர அபேசிங்க தெரிவித்தார்.

குறித்த நபர் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவின் வூஹானில் இருந்து வந்தவர் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 

அவர் பிலிப்பைன்ஸிற்கு வரும் முன்பு வைரஸ் தொற்றியிருக்கலாம் என நம்பப்படுவதோடு, குறித்த நபர் காய்ச்சல், இருமல், தொண்டை நோவு ஆகிய அறிகுறிகளுடன் சேன் லஷாரோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டதோடு, குறித்த இருவரம் வூஹானைச் சேர்ந்தவர்கள் எனவும் முதலாவது நபரைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது நபரும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கொரோனா வைரஸினால் பலியானோரின் எண்ணிக்கை 305 ஆக உயர்வடைந்துள்ளது.

சீனாவில் மாத்திரம் 304 பேர் பலியாகியுள்ளனர். அங்கு மேலும் 45 பேர் பலியாகியதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வூஹான் நகரம் அமைந்துள்ள ஹுபே மாகாணத்திலேயே இம்மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஹுபே மாகாணத்தில் 294 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

சீனாவில் மொத்தமாக மேலும் 2,590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதோடு, அதில் ஹுபேயில் 1,921 பேர் அடங்குகின்றனர்.

அந்த வகையில் ஹுபேயில் 9,074 கொரோனா தொற்று நோயாளிகள் உள்ளிட்ட சீனாவில் 14,380 கொரோனா தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சீன சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆயினும் ஹுபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து சுகமடைந்தவர்கள் 215 பேர் என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Sun, 02/02/2020 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை