3ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றியீட்டி இந்தியாவை பழிதீர்த்தது நியூசிலாந்து

3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை எளிதாக வீழ்த்தி ரி 20 கிரிக்கெட்டில் வெள்ளையடிப்புக்கு பழிக்குப்பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்கள் பெற்றது. கேஎல் ராகுல் 112 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 62 ஓட்டங்களும், மணிஷ் பாண்டே 42 ஓட்டங்களும் சேர்த்தனர்.

பின்னர் 297 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் குப்தில், நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிக்கோலஸ் நிதானமாக விளையாட குப்தில் அதிரடியாக விளையாடி 46 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 66 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து வந்த தலைவர் கேன் வில்லியம்சன் 22 ஓட்டங்களிலும், ராஸ் டெய்லர் 12 ஓட்டங்களிலும் வெளியேறியனர். மறுமுனையில் நிக்கோல்ஸ் 80 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 32.5 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

103 பந்தில் 108 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் டாம் லாம் உடன் நீசம் ஜோடி சேர்ந்தார். நீசம் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிராண்ட்ஹோம் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் என விரட்டினார். டாம் லதம் அவருக்கு துணையாக பந்துக்கு பந்து ஓட்டங்கள் சேர்த்தார். கிராண்ட் ஹோம் அரைசதம் அடிக்க நியூசிலாந்து 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களும் விளாசி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3--0 என கைப்பற்றி இந்தியாவை வெள்ளையடிப்பு செய்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ரி 20 தொடரை இந்தியா 5--0 எனக் கைப்பற்றியிருந்தது. தற்போது அதற்கு பழிக்குப்பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.

கிராண்ட்ஹோம் 28 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ஓட்டங்களும், டாம் லதம் 34 பந்தில் 3 பவுண்டரியுடன் 32 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை