இத்லிப்பில் 3 நாட்களில் 200 வான் தாக்குதல்கள்

பொதுமக்களை பிரதான இலக்காகக் கொண்டு கடந்த மூன்று நாட்களில் வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது சுமார் 200 வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

சிரிய அரசு மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யா இத்லிப் மாகாணத்தின் மீதான இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக சிரியாவுக்கான அமெரிக்க விசேட தூதுவர் ஜேம்ஸ் ஜெப்ரி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

கடைசியாக அரிஹா நகரில் பேக்கரி மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு அருகில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ரஷ்யா இதனை மறுத்துள்ளது.

ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக உள்ள இத்லிப்பில் அண்மைய வாரங்களில் மோதல்கள் உக்கிரம் அடைந்துள்ளதோடு சிரிய இராணுவம் அங்கு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னேறி வருகிறது.

படையினர் கடந்த புதன்கிழமை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மாரத் அல் நுமன் நகரை கைப்பற்றினர். இங்கு டமஸ்கஸ் மற்றும் அலெப்போவை இணைக்கும் நெடுஞ்சாலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

படையினர் தற்போது அரிஹா மற்றும் சரகப் நகர்களை நோக்கி வடக்கா முன்னேறி வருகின்றனர்.

“ஒவ்வொரு நாளும் அங்கு குண்டுகள் விழுகின்றன. எந்த ஒரு போர் விமானங்கள், விமானங்கள், ஏவுகணைகளின் சத்தம் கேட்காமல் ஒரு நாள் கடந்தால் இதனை விடவும் மிகப்பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என்று நாம் பயப்படுகிறோம்” என்று கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

சிரிய இராணுவம் முன்னேற்றம் அடையும் நிலையில் ஏற்கனவே இடம்பெயர்ந்திருக்கும் 700,000 மக்கள் மீண்டும் துருக்கி எல்லையை நோக்கிச் செல்ல ஆரம்பிப்பார்கள். இது சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஜெப்ரி எச்சரித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 1ஆம் திகதி தொடக்கம் சுமார் 390,000 பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை