ஐ.தே.கட்சி அரசில் வாகன கொள்வனவுக்கு ரூ. 2.8 பில். செலவு

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவுகளுக்காக 2.8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த 2015.01.08ஆம் திகதியிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான செலவுகள் தொடர்பில் ஜே.வி.பி எம்.பி நளிந்த ஜயதிஸ்ச, பிரதம அமைச்சர் மற்றும் நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருதி அமைச்சர் , புத்ததாசன , கலாசார மற்றும் சமய அலுவல்கள் மற்றும் நகர அபிவிருத்தி , நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்காக வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 28 ஆயிரம் இலட்சம் ரூபா வரையில் செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் அமைச்சர்களுக்கான வாகனங்களுக்கென 1.65 பில்லியன் ரூபாவும், இராஜாங்க அமைச்சர்களின் வாகனங்களுக்காக 652.85 மில்லியன் ரூபாவும், பிரதி அமைச்சர்களின் வாகனங்களுக்காக 564.99 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது என்றார். அத்துடன், கடந்த அரசாங்க காலத்தில் ஒவ்வொரு அமைச்சருக்காகவும் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள், அவற்றின் வகைகள் மற்றும் அவற்றின் பெருமதிகள் தொடர்பான தகவல்களையும் சபையில் சமர்பித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை