விக்னேஸ்வரன் இணைந்தால் தமிழ் கூட்டமைப்புக்கு 23 ஆசனங்கள் ​கிடைக்கும்

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22, 23 ஆசனங்களைப் பெற வேண்டுமாயின் விக்னேஸ்வரன் ஐயா எங்களோடு இணைந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விக்னேஸ்வரன் ஐயாவின் இணைவு குறித்து கூட்டமைப்புக்குள் தொடர்ச்சியாக பேசி வருகிறோம். விக்னேஸ்வரன் தரப்பு சமிக்ஞை காட்டுகிறார்கள். ஆகவே அச் சமிக்ஞைக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

வெறுமனே ஆசனங்களுக்காக நாங்கள் செயற்பட முடியாது. அந்த வகையில் நாங்கள் விட்டுக்கொடுத்து செல்வதற்கு தயாராக இருக்கின்றோம். ஆகவே விக்னேஸ்வரன் ஐயா கூறிய கருத்தின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதேபோல விக்னேஸ்வரன் ஐயாவும் செயற்படுகின்ற போது வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் வாக்குகளை பெறும்போது 22, 23 ஆசனங்களை மிக சுலபமாக பெறமுடியும். கூடுதல் ஆசனங்கள் பெறுகின்றபோது ஆட்சியமைக்கின்ற சக்திகளை நிர்ணயிக்கின்றவர்களாக நாங்கள் இருப்போம்.

வடக்கு, கிழக்கு என்று நாங்கள் பிரிந்துபோக முடியாது. கிழக்கிலே மக்களை அரவணைக்கக்கூடிய செயற்பாட்டை நாங்கள் செய்வோமாக இருந்தால், ஒரு காலமும் எங்கள் தமிழ்மக்கள் வேறு திசைக்கு செல்லமாட்டார்கள்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தென்னிலங்கை கட்சிகளின் பிரித்தாளும் தந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சரியான முடிவுகளை மக்கள் எடுப்பார்கள்.

இலங்கை அரசாங்கத்தின் பின்னணியிலே செயற்படுகின்ற சிறிய சிறிய உதிரிக்கட்சிகள் பணத்தை மக்களுக்கு கொடுத்து வாக்குகளைப் பிரிக்கின்றபோது கூட்டமைப்புக்கு ஆசனங்கள் குறைகின்ற நிலையினை உருவாக்குகின்றனர். இப்படியாக முளைவிட்டு உருவாகின்ற சிறிய இதர கட்சிகள் வாக்குகளை சிதறடிப்பதனால் சிங்கள கட்சிகள் வடக்கு, கிழக்கில் ஆழமாக காலூன்றி, நாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த வரலாறு ஒழிக்கப்படும்.

இதர கட்சிகள் எங்களுடைய மக்களின் பலவீனங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டுமென நினைத்தால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்பதை தெட்டத்தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

மண்டூர் குறூப் நிருபர்

 

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை