2/3 பெரும்பான்மை பெற சு.க. தனித்து போட்டியிட வேண்டும்

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் 4பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியுமென்பதால் பொதுஜன பெரமுனவின் கீழ் அதிக தொகுதிகளில் போட்டியிட முற்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத்தர வேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைத்திரிபால சிறிசேனவின் சூழ்ச்சி காரணமாகத்தான் இந்த நாடு கடந்த ஐந்து வருடங்களில் பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. சூழ்ச்சிகளுக்கு அப்பால் ஒரு பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள சு.க பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாக கூறுகிறது. அதனை வரவேற்கின்றோம்.

ஆனால், சு.க தனித்து தேர்தலில் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

அதனைவிடுத்து பொதுஜன பெரமுனவிடம் அதிக தொகுதிகளைப் பெற்று அதில் போட்டியிட எண்ண வேண்டாமென அவர்களுக்கு கூற விரும்புகிறோம். சு.க. தனித்து போட்டியிட்டால் 4 பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 02/01/2020 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை