கைவிடப்பட்ட நிலையில் 2178 ஏக்கர் தோட்டங்கள்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு பணிப்பு

பதுளை மாவட்டத்தில் 2178 ஏக்கர் தேயிலைக் காணிகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அவற்றை மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (05-–02–-2020) பதுளை அரச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பதுளை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 2178 ஏக்கர் தேயிலைக் காணிகள் ஆகக் குறைந்த வருமானங்களைப் பெற்று வருகின்றன. இத்தகைய பயனற்றுக் கிடக்கும் காணிகளை மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கு உத்தரவு விடுத்துள்ளேன்.

பெருந்தோட்டக் கம்பனிகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் அவற்றை பெற்றிருக்கின்றனவேயன்றி பெருந்தோட்டங்கள் அக்கம்பனிகளுக்கு சொந்தமானதல்ல. பெருந்தோட்டங்களின் அனைத்து காணி உரிமைகளும் அரசாங்கத்துக்கே சொந்தமானது.

ஆகவே அத்தேயிலைக் காணிகள் குறித்து முடிவெடுக்கும் உரிமையும் அரசாங்கத்துக்கே உண்டு. மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் கிராமவாசிகளுக்கு பொருத்தமான இடங்கள் இல்லாமையினால் கைவிடப்பட்ட அல்லது ஆகக் குறைந்த வருமானத்தைத் தரும் தேயிலைக் காணிகளை இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கவும்.

இவ் விடயத்தில் நன்கு பயன் தரும் மற்றும் வருமானம் தரக்கூடிய பெருந்தோட்டக்காணிகள் எவ்வகையிலும் பகிர்ந்தளிக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

பதுளை தினகரன் விசேட நிருபர்

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை