பெண்கள் டி20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான பெண்கள் உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கை பெண்கள் அணி 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.

பேர்த்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை பெண்கள் அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களையே பெற்றது.

அணித்தலைவி சமரி அத்தபத்து 30 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றபோதும் பின்வரிசையில் எவரும் சோபிக்கவில்லை. பந்துவீச்சில் ஹெய்லி ஜேன்சன் 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து பெண்கள் சார்பில் அதன் தலைவி சோபியா டேவின் ஆரம்ப வீராங்கனையாக களமிறங்கி 55 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் கவிஷ டில்ஹாரி மற்றும் சமரி அத்தபத்து தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தத் தோல்யுடன் ஏ குழுவில் ஆடும் இலங்கை அணி ஒரு போட்டியில் எந்தப் புள்ளியும் இன்றி பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து அணி இந்தப் குழுவில் 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்து இலங்கை பெண்கள் அணி அவுஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை