படகு மூழ்கி ரொஹிங்கிய அகதிகள் 15 பேர் பலி

ரொஹிங்கிய அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று பங்களாதேஷின் தெற்கு கடற்பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் படகு மலேசியாவை நோக்கி பயணித்திருப்பதோடு இதில் பங்களாதேஷ் முகாம்களில் உள்ள ரொஹிங்கிய அகதிகளும் இருந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்த சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டிருப்பதோடு அவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதில் 70 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் காணாமல்போயிருப்பதாகவும் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். செயின்ட் மார்டின் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் இந்தப் படகு மூழ்கியுள்ளது.

படகில் 50 பேரே இருக்க முடியும் என்ற நிலையில் சுமார் 130 பேர் ஏற்றப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மார் இராணுவம் கடந்த 2017 ஓகஸ்ட் மாதத்தில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கானோர் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.

இவ்வாறு தஞ்சமடைந்த அதிகமானவர்கள் அகதி முகாம்களில் வாழ்வதோடு சிலர் படகுகள் மூலம் மலேசியாவுக்குச் செல்ல முயல்கின்றனர்.

பங்களாதேஷுக்கு அடுத்து அதிக ரொஹிங்கிய அகதிகள் உள்ள நாடாக மலேஷியா உள்ளது. அங்கு 100,000க்கும் அதிகமான ரொஹிங்கிய அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர்.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை