கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட 1000 ரூபாவுக்கு காலம் தாழ்த்தியது ஏன்?

சபையில் திலகர் எம்.பி கேள்வி

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் 2018 ஆம் ஆண்டே ஆயிரம் ரூபா தருவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி அன்று கைச்சாத்திடப்பட்டிருந்தால் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் மொத்த சம்பளம் 1000 ரூபாவாகவும் மூன்றாவது ஆண்டில் 1058/- ஆகவும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020 இல் இந்த தொகை கிடைக்கக்கூடியதாக இருந்தும் அப்போது மறுத்துவிட்டு காலம் தாழ்த்தி அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள எத்தனிப்பது அரசியல் நோக்கத்துக்காகவா என அந்த ஆவணத்தையும் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய திலகர் எம்.பி கேள்வி எழுப்பினார்.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையின் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அது 1948 ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்துக்கானது. ஆனாலும் 1972 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்டங்களை பிரிட்டிஷ் கம்பனிகளே நடாத்தின. அப்போது கொண்டுவரப்பட்ட காணி சுவீகரிப்பு சட்டத்தினாலேயே அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பெடுத்தது. இன்று ஆயிரம் கொடுக்காவிட்டால் அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்க வேண்டும் என்பது புதிய விடயம் போல கூறப்பட்டாலும் 1972 ஆம் ஆண்டு அதுவே நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டு வரை அரச கூட்டுத்தாபனங்களே அவற்றை நடாத்தின. அது வெற்றி அளிக்காதபோதே மீண்டும் 1992 ஆம் ஆண்டில் அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக 1998 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்த நடைமுறையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. கூட்டு ஒப்பந்த நடைமுறை சர்வதேச தொழில்தாபன சாசனத்துக்கு உட்பட்டது. எனினும் இங்கே தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்யப்படும் ஒப்பந்தமானது நேர்த்தியான நியமங்களை கொண்டதல்ல.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாகவும் அது செய்யப்பட்டு வந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு 9 பக்கங்களைக் கொண்ட அந்த ஒப்பந்தம் 2000 ஆம் ஆண்டு இரண்டு பக்கத்துக்கு சுருங்கி முதலாவது ஒப்பந்தத்தில் உள்ள தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஆண்டுக்கு 300 நாட்கள் வேலைகள் வழங்கப்படுதல் வேண்டும். வரவுக்கேற்ப மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுதல் வேண்டும் எனும் சரத்துகள் நீக்கப்பட்டன.

2000 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து தொழிலாளர்களுக்கு 400ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டபோது இந்த ஒப்பந்தம் காரணமாக அவர்களுக்கு 400ரூபா ரூபா மறுக்கப்பட்டது. இன்று 1000 ரூபா போல் அன்று 400ரூபாவுக்கான ஹற்றன் மல்லியப்புசந்தியில் சத்தியாக்கிரகம் நடந்தது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களே அதனைச் செய்தார்கள்.

அந்தப் போராட்டத்தின் பின்னதாக ஏற்பட்ட கடும் விமர்சனங்களை அடுத்து 2003 ஆண்டு 16 பக்கங்களைக் கொண்டதாக மீண்டும் தொழிலாளர் உரிமைகளை உறுதிபடுத்தி கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக அதனை உறுதிப்படுத்த கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்கள் தவறியதன் காரணமாக தொழிலாளர் உரிமைகள் பல மறுக்கப்பட்டன. குறிப்பாக 2016 -2018 க்கான ஒப்பந்தத்தில் அவர்கள் அவுட்குரோவர் முறைக்கு ஒப்புதல் தெரிவித்ததன் காரணமாக இன்று தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுடன் தனியான ஒப்பந்தம் செய்து தோட்டத்தைப் பராமரிக்கும் செலவுகளையும் தொழிலாளர்கள் மீது சுமத்தும் கைங்கரியத்தைக் கம்பனிகள் செய்கின்றன. அத்தகைய ஒப்பந்தத்தில் களை பிடிங்குதல், உரமிடுதல், நிழல் மரங்களை நாட்டுதலும் பராமரித்தலும், கவ்வாத்து வெட்டுதல், அமர வேர்களை சுத்தம் செய்தல், பழைய கான்களை வெட்டுதல் என பல வேலைகளையும் தொழிலாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கூட்டு ஒப்பந்த நடைமுறைகளுக்கும் சர்வதேச தொழில் தாபன சாதனங்களுக்கும் முரணானது.

இந்த நிலையில்தான் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் 2018 ம் ஆண்டே ஆயிரம் ரூபா தருவதற்கு உடன்பாடு தெரிவித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதன்படி அன்று கைச்சாத்திடப்பட்டிருந்தால் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் மொத்த சம்பளம் 1000 ரூபாவாகவும் மூன்றாவது ஆண்டில் 1058/- ஆகவும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020 ல் இந்த தொகை கிடைக்கக்கூடியதாக இருந்தும் அப்போது மறுத்துவிட்டு காலம் தாழ்த்தி அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள எத்தனிப்பது அரசியல் நோக்கத்துக்காகவா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே இவ்வாறான முறையற்ற நிர்வாக முறைமையில் தோட்டத் தொழிலாளர்களை ஒப்பந்த பிரஜைகளாக மாற்றாது அவர்களை தென்பகுதி மக்களைப் போன்று மலைநாட்டு தமிழ்த் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளர்களாக்குங்கள்.

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை