சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1000ஐ தாண்டியது

மூத்த அதிகாரிகள் பலர் நீக்கம்

புதிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ தாண்டியிருக்கும் நிலையில், சீனாவில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்ட பல மூத்த அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஹுபெய் சுகாதார ஆணைக்குழுவுக்கான கட்சி செயலாளர் மற்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரும் பதவி பறிபோனவர்களில் உள்ளனர். இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மிக மூத்த அதிகாரிகளாக இவர்கள் உள்ளனர். நன்கொடைகளை கையாள்வது தொடர்பில் கடமையை தவறவிட்ட உள்நாட்டு செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிப் பணிப்பாளரும் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஹுபெய் மாகாணத்தில் மாத்திரம் ஒரு நாளைக்குள் 103 பேர் உயிரிழந்திருப்பதோடு இந்த வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் சீனாவில் தேசிய அளவில் புதிதாக நோய் தொற்றுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு நோய் தொற்றுபவர்கள் எண்ணிக்கை 3,062 இல் இருந்து 2,478 ஆக குறைந்துள்ளது.

ஹுபெய் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை 2,097 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றி இருப்பதை அந்த மாகாண சுகாதார ஆணைக்குழு உறுதிசெய்துள்ளது. இது முந்தைய தினத்தில் பதிவான 2,618 நோய் தொற்று சம்பவத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். புதிய வைரஸ் தொற்றை அடுத்து ஹுபெய் மற்றும் ஏனைய மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் பதவி நீக்கப்பட்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் இருப்பதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து சீன நிர்வாகம் மீது அண்மைய நாட்களில் விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. இந்த வைரஸ் குறித்து ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்த மருத்துவர் ஒருவர் நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் அவர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது பொதுமக்களிடையே ஆத்திரத்தை தூண்டியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்திருக்கும் லீ என்ற மருத்துவர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஹுபெய் மாகாணத்திற்கு சீன அரசு தனது உயர்மட்ட ஊழல் விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளது.

சீனாவெங்கும் இந்த வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட 42,200 க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2002–03 காலப்பகுதியில் ஏற்பட்ட சார்ஸ் நோய்க்கு அடுத்து சீனா பெரும் சுகாதார நெருக்கடி நிலை ஒன்றை எதிர்கொண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முடிவின்போது ஹுபெய் மாகாணத்தில் மொத்தம் 31,728 பேருக்கு நோய் தொற்றி இருப்பதாகவும் 974 பேர் உயிரிழந்திரப்பதாகவும் அந்த மாகாண சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இது 3 வீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

இதில் முக்கால் பங்கு உயிரிழப்பு ஹுபெய் தலைநகர் வூஹானில் பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் மையப்புள்ளாக இந்த நகர் உள்ளது. இங்கு 11 மில்லியன் மக்கள் கடந்த சில வாரங்களாக வெளித் தொடர்பு இன்றி முடக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொள்ளை நோய்களைக் கையாள்வதில் அனுபவம் மிக்க உலக சுகாதார நிறுவனத்தின் அதி சிறப்பு வல்லுநர்கள் குழு ஒன்று சீனா சென்று சேர்ந்தது. இந்நிலையில் மிக அரிய நிகழ்வாக, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு முகக் கவசத்துடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அங்கு தனக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதையும் அவர் பரிசோதித்துக் கொண்டார்.

கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராட மேலும் அதிக உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.

இதுவை 24 பிற நாடுகள் மற்றும் பகுதிகளில் 319 வைரஸ் தொற்று சம்பவங்களே பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சீன பெருநிலத்திற்கு வெளியில் ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை