ஆட்கொல்லி வைரஸ் தொற்று;நாட்டுக்குள் பரவுவதை தடுக்க விசேட வைத்தியபீடம்

* ஸ்ரீலங்கன் விமான சேவையினரும் தீவிரம்

* இலங்கை மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை
* ஹுவாங்காங்க் நகரை முழுமையாக மூட சீனா முடிவு

உலகில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ‘கொரோனா ஆட்கொல்லி வைரஸ்’ நோய்த் தொற்று நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ் விடயம் தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் என்னிடம் கேட்டறிந்துகொண்டிருப்பதுடன், நோய்த் தொற்று நாட்டுக்குள் ஊடுருவாமல் இருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளனர்.

இதற்கமைய நாட்டுக்குள் வரும் விமானப் பயணிகளுக்கு இந் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அது குறித்து விமான நிலையத்திலுள்ள விசேட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக விமான நிலையத்தில் விசேட வைத்திய பீடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா வைரஸ்’ நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் நாட்டில் இருப்பது குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் பதிவாகவில்லை. ‘கொரோனா வைரஸ்’ நோயினால் பாதிக்கப்பட்ட சீனக் குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அக் குழந்தை சாதாரண காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை சீனா உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகளில் பரவி வரும் ‘கொரனா வைரஸ்’ தாக்கத்திலிருந்து பயணிகளையும் சேவையாளர்களையும் பாதுகாப்பதற்காக சிறிலங்கன் விமான சேவைகள் பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.இதனடிப்படையில் சிறிலங்கன் எயார்லைன்ஸின் விமானப் பணியாளர்கள் மற்றும் ஏனைய சேவையாளர்களுக்கு விமானத்திலும் விமானநிலையத்திலும் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.சிறிலங்கனுடன் தொடர்புபட்ட ஏனைய விமானசேவைகள், சுகாதார அமைச்சு மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலுள்ள சுகாதார அதிகாரிகளுடனும் சிறிலங்கன் விமானசேவைகள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தல்கள் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுவாங்காங்க் நகரில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மாணவர்களுடன் முடிந்த வரை தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பீஜிங் நகரிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அறித்துள்ளது.

‘கொரோனா வைரஸ்’ பரவியதன் காரணமாக சீனாவின் ஹுவாங்காங்க் நகரத்தை முழுமையாக மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கல்வி பயிலும் 44 இலங்கை மாணவர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.ஹுவாங்காங்க் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அந்த மாநில அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட அறிப்புக்களை விடுத்துள்ளது.தற்போது அங்கு பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் நடமாட வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுமானவரையில் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.சில வேளைகளில் நோய்த் தாக்கம் ஏற்பட்டால் உடனடியாக அந்நாட்டு சுகாதார பிரிவுக்கு அறிவிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.சீனாவில் உக்கிரமடைந்துள்ள ‘கொரனோ’ வைரஸ் சீன உல்லாசப் பிரயாணிகள் மூலம் இலங்கையில் பரவாமலிருக்க சகல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்றுக் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் இது தொடர்பில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தற்போது சீனாவில் ‘கொரோனோ’ வைரஸ் சீனாவின் இரண்டு நகரங்களில் பூதாகாரமாகியுள்ளது. இது சிங்கப்பூர், ஹொங்கொங் வரை விஸ்தரித்துள்ளது. இன்று 25ஆம் திகதி முதல் பெப்ரவரி 8ஆம் திகதி வரை சீன புதுவருட கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ள வேளையில், இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிசாந்தன்

 

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை