ரஞ்சனின் கோரிக்கையை நிறைவேற்றாத நீதிபதி கைதாவதை ஏற்க முடியாது

உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதாக அமைச்சர் விமல் சபையில் தகவல்

நாட்டின் நீதி கட்டமைப்பை துண்டாடுவதற்கு எவராவது நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ரஞ்சன் ராமநாயக்கவுடனான நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவின் தொலைபேசி உரையாடல் தகவல்களின்படி ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கையை அவர் நிறைவேற்றியிருக்காத நிலையில் அவரை கைது செய்ய முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்லவென அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந் நிலையில் நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமரர் ரஞ்சித் டி சொய்சாவின் அனுதாப பிரேரணை மீதான பிரேரணையின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் சட்டம் செயற்படுத்தப்பட்ட முறையை நாம் பார்த்துள்ளோம். சபாநாயகரின் தலைமையில் கூடும் அரசியலமைப்பு பேரவையென ஒன்று உள்ளது. அந்த பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட மாஅதிபர் டப்புல டி லிவேரேவே தற்போதும் பதவியில் இருக்கின்றார்.

அவர் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கோரும் போது அதனை செய்தார்கள். இந்த சட்ட மாஅதிபரே தற்போது நீதிபதி கிஹான் பிலபிட்டியவை உடனடியாக கைது செய்யுமாறு கூறியுள்ளார். ஏன் அப்படி கூறினார் என தெரியவில்லை.

கிஹான் பிலபிட்டியவை விடவும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஒன்றாக கலந்துரையாடும் வேறு நீதிபதியொருவர் தொடர்பான வீடியோ பதிவும் இருக்கின்றது. கடுவலை முன்னாள் நீதவானே அவர்.

அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கவில்லை. ரஞ்சன் ராமநாயக்க எம்.பி தனது நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தார் என முறையிட்ட கிஹான் பிலபிட்டியவை கைது செய்யுமாறு உத்தரவிடுகின்றார்.

உண்மையில் கிஹான் பிலபிட்டிய, ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடலில் ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை. பௌசியை ஒரு மணி நேரமாவது சிறையில் போடுமாறு அவர் கேட்கின்றார்.

அதனை அவர் நிறைவேற்றவில்லை. இதன்பின்னர் அவர் அது தொடர்பாக முறையிடுகின்றார். முறையிட்டவரை எப்படி சிறையில் போட முடியும்?.

இவ்வாறான சட்ட மாஅதிபரை நியமித்துக்கொண்டு அடக்குமுறை பொறிமுறைகளை செயற்படுத்திய போதும் நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை