பங்களாதேஷ் அரசின் உதவி பெற அமைச்சர் டக்ளஸ் பேச்சுவார்த்தை

நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுபவத்தினையும் உதவிகளையும் வரவேற்பதாகவும் குறுகிய காலத்தில் நன்னீர் மீன் வளர்ப்பில் அபிவிருத்தியடைந்த பங்களாதேஷின் செயற்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக விரைவில் பங்களாதேஷுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சுக்கு நேற்று வருகைதந்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் றியாஷ் ஹாமிதுல்லாவிற்கும் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறினார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற நீர்நிலைகளில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றிக் கொள்ள முடியும். வீட்டுத் தோட்டங்களைப் போன்று நன்னீர் மீன் வளர்ப்பையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவன் மூலம் பெண்களையும் கணிசமானளவு நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபடுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், நன்னீர் மீன் வளர்ப்பில் உலளாவிய ரீதியில் ஐந்தாவது இடத்தில் பங்களாதேஷ் இருப்பதாகவும் நாட்டில் இயற்கையாக காணப்படுகின்ற நீர்நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, நெற்செய்கைக்கு பயன்படுத்துகின்ற நீரை தேக்கி வைத்து அதனை நன்னீர் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தும் பொறிமுறையை பின்பற்றுவதன் மூலம் பாரிய வெற்றியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஷைவிட அதிகளவான நன்னீர் நிலைகள் இலங்கையில் காணப்படுகின்ற நிலையில் அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

 

Sat, 01/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை