வீடமைப்பு அமைச்சின் கீழ் தளத்தில் குவிந்து கிடக்கும் பல கோடி ரூபாய்

10 மில்லியனில் 25 வீடுகள்; விளம்பரங்களுக்கு 5 மில். செலவு

முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச நிதியில் இலட்சக் கணக்கான போஸ்டர்கள், அழைப்பிதழ்கள், வீடமைப்புக் கிராமங்கள் பற்றிய கையேடுகள் அச்சடிக்கப்பட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி வீண் விரயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் சுதத் அபேவர்தன தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அதிகார சபையின் முன்னாள் தலைவர் அனுமதியின் கீழ் அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் இலட்சக் கணக்கில் அதிகார சபையின் கீழ் தள மாடியில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் வீடமைப்பு ஊழியர்களுக்கு வீடமைப்புக் கடன், மருத்துவ கொடுப்பனவுகள். சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு அதிகார சபை நிதிப்பற்றாக்குறைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சுதத் அபேவர்தன, ஊடகவியலாளர்களை அழைத்து தேங்கிக் கிடக்கும் போஸ்டர்கள். சஞ்சிகைகள், கையேடுகள் என்பவற்றை காண்பித்தார்.

இதனை தொடர்ந்து இது தொடர்பாக கூறுகையில்,

5 வருட காலத்திற்குள் 5,200 வீடுகளையே நாடு முழுவதிலும் நிர்மாணித்துள்ளார். 7 அல்லது 25 வீடுகள் கொண்டதொரு வீடமைப்புக் கிராமத்திற்கு வீடுகள் நிர்மாணிக்க 10 மில்லியன் ருபா செலவாகியுள்ளது. ஆனால் விளம்பரம், போஸ்டர், கையேடுகள், பதாதைகளுக்கு 5 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிகழ்வுகள் முன்னாள் அமைச்சரினால் பிற்போடப்பட்டால் விளம்பரத்திற்காக செலவு செய்த 5 மில்லியன் ரூபா வீணாகியுள்ளது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் தள மாடியில் தேங்கிக் கிடக்கும் போஸ்டர்கள், கையேடுகள், அழைப்பிதழ்கள் அச்சடிப்பதற்காக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட அரச நிதி வீணாக தனியார் அச்சகத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் நிர்மாணித்த 150 கிராமத்திற்கும் 5,200 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் விளம்பரத்திற்கு செலவு செய்த நிதி ஏழை மக்களுக்கு மேலும் 6,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுத்திருக்க முடியும்.

அம்பாந்தோட்டையில் நிர்மாணித்த ஒரு வீடமைப்புக் கிராமம் திறப்பதற்கு முன் அக் கிராமம் பற்றிய போஸ்டர்கள் பாதைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட 25 ஆயிரம் போஸ்டர்கள் 24 மாவட்டத்திலும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக ஊழியர்கள், அரச வாகானங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை கல்கிஸை விசேட நிருபர்

 

 

Sat, 01/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை