கல்வி முறையில் மாபெரும் சீர்திருத்தம்; கல்விமான்கள் அடங்கிய புதிய செயலணி

அமைச்சரவை அனுமதியுடன் ஸ்தாபிப்பு

நாட்டின் கல்வி முறையில் மாபெரும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வகையில் கல்விமான்களடங்கிய புதிய கல்விச் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும அமைச்சரவை அனுமதியுடன் இக் கல்விச் செயலணியை ஸ்தாபித்துள்ளார்.

கலாநிதி எம்.உபாலி சேதர தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இச் செயலணியில் கலாநிதி பி.என் மீகஸ்வத்த, பேராசிரியர் சுதத் லியனகே, பேராசிரியர் எம்.டி லமாஹேவா, பேராசிரியர் டபிள்யூ.டி குலரத்ன, முன்னாள் கல்விச் செயலாளர் எஸ்.யூ விஜேரட்ண, பேராசிரியர் ரஸ்நாயக்க எம். முதியன்சே, பேராசிரியர் ஹர்ஷ அலஸ், கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மதுர வெஹேல, பேராசிரியர் நாரத வர்ணசூரிய, கலாநிதி டி.ஏ. பியசிறி ஆகியோரும் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இச் செயலணி அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான வேலைத்திட்டங்கள் மற்றும் யோசனைகளை முன்வைக்கும்.

அத்துடன் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி முறைகளை ஒழுங்குப்படுத்துதல், வெளிநாட்டுத் தொடர்புகளை முன்னெடுத்தல் மற்றும் புதிய யோசனைகளை அறிமுகம் செய்தல் ஆகிய பணிகளையும் இச்செயலணி முன்னெடுக்கவுள்ளது.

இலங்கையில் நடைமுறையிலுள்ள இலவசக் கல்வியை தொடர்ந்து பேணும் அதேநேரம் அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள கல்விமான்களை இணைக்கும் நோக்கிலேயே இச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இச் செயலணியின் அங்கத்தவர்களுக்கு கல்வியமைச்சர் டளஸ் அளகப்பெரும கடந்த செவ்வாய்க்கிழமை நியமனங்களை வழங்கியுள்ளார். இலவசக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுடன் கிராமங்களில் பாடசாலைகள் மூடப்படுவதை தடுத்து அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும்.

புதிய தொழில்நுட்பங்களை பாடசாலைகளுக்கு அறிமுகம் செய்தல், ஆரம்ப பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை உள்வாங்குவது, மாவட்ட ரீதியில் 20 மும்மொழி பாடசாலைகளை நிறுவுதல், கல்வி நிருவாகச் சேவையில் சீர்திருத்தங்களை முன்னெடுத்தல், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருதல், பாடதிட்டங்களை மேம்படுத்தல், மாணவர்களை இலக்கு வைத்த கல்வி முறைமையொன்றை ஏற்படுத்தல், மாணவர்களின் சுகாதாரம், போஷாக்கு, பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்யும் வகையிலான வேலைதிட்டங்களை முன்னெடுத்தல், தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்தல் உள்ளிட்ட பல கல்வித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பில் இச் செயலணி பல யோசனைகளை கல்வியமைச்சுக்கு முன்வைக்கவுள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

 

 

Sat, 01/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை