பதற்றம் தணிவு: ஈரானுடன் பேச்சுக்கு அமெரிக்கா தயார்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தைத் தொடர்ந்து, ஈரானுடன் முன் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தை ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  

ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே ஈரானிய இராணுவ ஜெனரல் காசெம் சுலைமானியை கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்திய கடிதம் ஒன்றில் அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது.  

இந்தப் படுகொலைக்கு பதில் நடவடிக்கையாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் கடந்த புதன்கிழமை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.  

ஜெனரல் சுலைமானி ஈரானின் இரண்டாவது அதிகாரம் மிக்கவராக கருதப்படுகிறார். ஈரானிய புரட்சிக் காவல் படையின் குத்ஸ் படைத் தளபதியான அவர், பிராந்தியத்தில் ஈரானிய கொள்கையை கட்டியெழுப்பியவராவார்.  

இந்த ஏவுகணை தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாக ஈரானிய உயர்மட்டத் தலைவர் அலி கமனெய் குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இருப்பை முடிவுக்குக் கொண்டுவரவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.  

சுலைமானி மீதான வான் தாக்குதலில் ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகளும் கொல்லப்பட்டனர். அதற்கு பழிதீர்க்கப்படும் என்று அந்தப் போராட்டக் குழு உறுதி அளித்துள்ளது.

எனினும் அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என தமது கூட்டணி போராட்டக் குழுக்களை ஈரான் கேட்டுப் கொண்டதாக உளவுத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சி.பி.சி நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.  

மறுபுறம் அமெரிக்க பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி ஈரானுக்கு எதிராக போர் தொடுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் தீர்மானம் ஒன்றின் மீது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஈரான், அமெரிக்கா     ஐ.நாவுக்கு கடிதம் 

இந்நிலையில் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் கெல்லி கிராப்ட் எழுதி இருக்கும் கடிதத்தில், ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானிய அரசின் விஸ்தரிப்பு அல்லது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயார் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

தற்பாதுகாப்புக்கு மேற்கொண்ட நடவடிக்கையை பாதுகாப்புச் சபைக்கு உடன் அறிவிக்கும் ஐ.நா சாசனத்தின் 51ஆவது பிரிவின் கீழ் சுலைமானியின் கொலையை அமெரிக்கா இந்தக் கடிதத்தின் மூலம் நியாயப்படுத்தியுள்ளது.  

அமெரிக்கர்கள் மற்றும் அதன் நலனை பாதுகாப்பதற்கு மத்திய கிழக்கில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  

எனினும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தொடர்ச்சியாக விதித்து வரும் நிலையில் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பது நம்பமுடியாதது என்று ஈரானின் ஐ.நா தூதுவர் மாஜித் டக்ட் ரவன்சி குறிப்பிட்டுள்ளார்.  

அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரானும் ஐ.நா சாசனத்தின் 51ஆவது பிரிவின் கீழ் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐ.நாவுக்கு ஈரான் எழுதி இருக்கும் கடிதத்தில், ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து இராணுவ பதில் நடவடிக்கை ஒன்றின் மூலம் தனது தற்பாதுகாப்பு உரிமையை செயற்படுத்தியபின், தொடர்ந்து போர் அல்லது பதற்றத்தை அதிகரிக்க ஈரான் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.  

“குறித்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்த்து இராணுவத்தை இலக்குவைத்ததாகவும் துல்லியமானதாகவும் இந்த நடவடிக்கை இருந்ததாக” ஈரான் எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முடிவை மாற்றிய டிரம்ப்  

அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்தால் இராணுவ நடவடிக்கை எடுப்பதாக முன்னர் எச்சரித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இராணுவ நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஈரானிய தாக்குதலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார்.  

“ஈரான் அரசு இரவு நடத்திய தாக்குதலில் எந்த அமெரிக்கருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்று வெள்ளை மாளிகையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் கூறியதாவது, “உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா. அதனைக் கருத்தில்கொண்டு, ஈரான் மீது எந்தத் தாக்குதலையும் நடத்த விரும்பவில்லை. ஆனால், அந்நாடு செய்த செயலுக்கான பலனை அவர்கள் கட்டாயம் அனுபவிக்க வேண்டும். 

எனவே, ஈரான் மீது தற்போது இருக்கும் பொருளாதாரத் தடையை மேலும் கடுமையாக்க முடிவு செய்திருக்கிறோம். இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை ஈரான் தூண்டி வருகிறது. ஈரான் என்ற ஒரே ஒரு நாட்டினால் அந்த பிராந்தியத்தின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, அனுமதி இல்லாமல் அணு ஆயுதங்களையும் ஈரான் தயாரித்து வருகிறது. அந்நாட்டின் இந்த அராஜகப் போக்கை அமெரிக்கா இனியும் வேடிக்கை பார்க்காது. அமெரிக்க ஜனாதிபதியாக நான் இருக்கும் வரை, அணு ஆயுதம் வைத்திருக்க ஈரானுக்கு அனுமதி இல்லை” என்றார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி டிரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சபாநாயகர் நான்சி பெலோசி, ஈரானுக்கு எதிரான டிரம்பின் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும், மேலும் உடனடியாக வன்முறையைத் தடுக்கும் விதமாக பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க நிர்வாகம் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்படவிருந்தது.

Fri, 01/10/2020 - 09:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை