ஆஸி. காட்டுத் தீயிலிருந்து தப்புவதற்கு மக்கள் கடற்கரைகளை நோக்கி ஓட்டம்

செந்நிறமாக மாறியது வானம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரையைச் சூழ்ந்த காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சிக்கித் தவித்தனர்.

பிரபல கடற்கரை சுற்றுலாத்தலமான மெல்லக்கூட்டா அருகே மூண்ட காட்டுத் தீயால், தீவில் கடுமையான இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடற்கரையில் சிக்கியுள்ள 4,000 பேரை மீட்க தீயணைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மக்கள் தேவைப்பட்டால், கடல் அல்லது ஆகாயவழி வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியு சவுத் வேல்ஸில் காட்டுத் தீ காரணமாக மேலும் இருவர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் நால்வரும் நியு சவுத் வேல்ஸி மேலும் ஒருவரும் காணாமல்போயிருப்பதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் தந்தை மற்றும் மகன் என்று நம்பப்படும் இருவரின் சடலங்கள் நியு சவுத் வேல்ஸின் கோர்பாகோ நகரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்றும் காட்டுத் தீ வேகமாக பரவியது.

நியு சவுத் வேல்சின் பெட்மான் பேயில் இருந்து விக்டோரியாவின் பிரின்டால் வரை அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களை உள்ளடக்கிய 500 கிலோமீற்றர் நீண்டதாக ஆபத்தான நிலையில் காட்டுத் தீச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கடற்கரையை ஒட்டிய பல சுற்றுலாத் தலங்களும் காட்டுத் தீ காரணமாக பிரதான நெடுஞ்சாலையில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் கடற்கரையோர சுற்றுலா நகரங்களில் வான்வெளி சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

வானம் செந்நிறமாக மாறி, வளிமண்டலத்தில் சாம்பல் தூசி பரவியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் மக்களும் தீயின் வெப்பம் மற்றும் மூச்சுத் திணறலில் இருந்து தப்ப துறைமுகப் பகுதி, கடலில் நிற்கும் சிறு படகுகள் மற்றும் பொதுக்கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

“இங்கே பகலிலும் நள்ளிரவு போன்று இருண்டு காணப்படுகிறது. தீயால் எரியும் சத்தம் கேட்கிறது” என்று உள்ளுர் வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “நாம் அனைவரும் உயிருக்கு பயந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

கரையோரமாக உள்ள காட்டுப் பகுதியில் இப்போதுள்ள நிலைமை மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. 2009ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 180 பேர் உயிரிழந்ததை அடுத்து இப்போதைய நிலைமையும் மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதில் நூற்றுக்கணக்கானோர் தங்களின் வீடுகளையும் இழந்துள்ளனர். பல மாதங்களாக காட்டுத்தீச்சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ள அவுஸ்திரேலியாவில் இப்போது இந்த அவசர நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களைப் பாதித்துள்ள காட்டுத்தீச் சம்பவங்களால் உலக வெப்பமயமாதலின் தாக்கம் குறித்த விவாதமும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, நேற்று சிட்னியின் மேற்குப் பகுதிகள் சிலவற்றில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்று கூறப்பட்டது. கிட்டத்தட்ட 100 புதர் மற்றும் புல் தொடர்பான தீச்சம்பவங்கள் கடந்த திங்கட்கிழமை சிட்னியில் பதிவாகின. சிட்னியின் வடமேற்குப் பகுதியில் எரிந்துகொண்டிருக்கும் ராட்சத தீ ஒன்றால் 1.2 மில்லியன் ஏக்கர் அளவு இடம் நாசமாகியுள்ளதாகக் கூறப்பட்டது. அப்பகுதி சிங்கப்பூரின் அளவைக் காட்டிலும் ஏழு மடங்கானது.

இதற்கிடையே காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் தலைநகர கென்பரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் வாணவேடிக்கைகளுக்கு தடையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்டுத் தீயின் காரணமாக வன விலங்குகள் பெருமளவிலான பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், பல இடங்களில் நீர் நிலைகளின் ஆதாரங்கள் பெருமளவில் அழிந்து இருப்பதாகவும் விலங்கு ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை