வளைகுடா யுத்தம் மூண்டால் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி

எரிபொருள் விலைச் சூத்திரம் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்திருக்குமானால் தற்போது அனைத்து வகை எரிபொருட்களினதும் விலை லீற்றருக்கு 10 ரூபா தொடக்கம் 15 ரூபாவால் அதிகரித்திருக்குமென பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நிறுத்தியதாலே,எரிபொருள் விலை அதிகரிப்பிலிருந்து தப்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் அமரவீர கூறினார். நேற்று அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது- அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் இடம்பெற்று வரும் பனிப்போர் காரணமாக தற்போது உலகில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது. இதனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளன . செல்வந்த நாடுகளுக்கு தடிமன் ஏற்பட்டால் எம்மைப் போன்ற நாடுகளுக்கு நியூமோனியா ஏற்படுமெனக் கூறுவர்.

நாம் தற்போது வெளிநாடுகளிலிருந்தே எரிபொருளை இறக்குமதி செய்கின்றோம். அதற்கு மாற்று தீர்வொன்று இல்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் அது நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலக விவகாரம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலை ஏற்படாத வகையில் அதற்கான ஏற்பாடுகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

இன்னும் 20 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எம்மிடம் கையிருப்பில் உள்ளது. மேலும் 35 ஆயிரம் தொன் எரிபொருளுடன் கப்பலொன்று இம்மாதம் இலங்கையை வந்தடையவுள்ளது.

அரேபிய வளைகுடாவில் யுத்தம் மூண்டால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 லக்ஷ்மி பரசுராமன்

 

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை