புதிய ஆயுதச் சோதனைகள் பற்றி வடகொரியா எச்சரிக்கை

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன், அணு குண்டுச் சோதனைகளையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் நடத்துவதில் கடைப்பிடித்துவரும் தற்காலிகத் தடையைத் தமது நாடு கைவிடுமென அறிவித்துள்ளார்.

உலகம் விரைவில் புதிய ஆயுதத்தைக் காணுமென அவர் தெரிவித்தார். வட கொரியாவின் அணுவாயுதத் தற்காப்பு ஆற்றலை, அமெரிக்காவின் நடத்தையே தீர்மானிக்குமென அவர் கூறினார். கடந்த சனிக்கிழமை ஆரம்பமான ஆளும் தொழிலாளர் கட்சிக் கூட்டத்தில் கிம் இதனைத் தெரிவித்தார்.

அணுவாயுதக் களைவு குறித்து நிறுத்தப்பட்டுள்ள பேச்சை, அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இழுத்தடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அதற்குக் குண்டர் கும்பலைப் போன்ற நிபந்தனைகளை அமெரிக்கா விதிப்பதாகவும் வட கொரியத் தலைவர் குறைகூறினார். கடந்த ஆண்டு இறுதிக்குள், அமெரிக்கா சில சலுகைகளைத் தனக்கு வழங்கத் தவறினால் புதிய பாதையில் செல்லப் போவதாக, வட கொரியா ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

2019 இறுதிப் பகுதியில் வட கொரியா சிறிய ரக ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டபோதும், அவை அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுப்பது போன்றே இருந்தது.

எனினும் அணு குண்டு சோதனை மற்றும் அமெரிக்க பிரதான நிலத்தை தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை பிரதானமாகக் கொண்டுள்ளது.

2017 தொடக்கம் வட கொரியா இவ்வாறான சோதனை ஒன்றை முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை