புதிய வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்க பிரதமர் பணிப்பு

100 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு 1,000 வீடுகளுக்கு அடிக்கல் கடந்த அரசின் ஏமாற்று அம்பலம்

புதிய நகர அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் புதிய வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.அத்துடன் கைவிடப்பட்டுள்ள திட்டங்களை துரிதமாக நிறைவு செய்யுமாறும் தெரிவித்த அவர்,

அரச ஆஸ்பத்திரிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கட்டில்கள் தருவிப்பதை நிறுத்தி, உள்நாட்டில் அரச தொழிற்சாலை ஒன்றினூடாக கட்டில்களை உற்பத்தி செய்யுமாறும் அறிவித்துள்ளார். இப்புதிய திட்டங்களுக்காக அடுத்துவரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நகர அபிவிருத்தி,நீர்ப்பாசன மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் கட்டட நிர்மாணங்கள்,வீதி அபிவிருத்தி, ரயில் பாதை, பூங்கா உருவாக்குதல் மற்றும் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் அடங்கலான நகர அபிவிருத்தி குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.

நகர அபிவிருத்தி,கழிவு முகாமைத்துவம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து இதன் போது பிரதமர் முக்கிய கவனம் செலுத்தினார். கடந்த காலத்தில் கைவிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவ திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

கடந்த நான்கரை வருடத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாடுமுழுவதும் ஆரம்பித்த பல வீடமைப்பு திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் அவற்றுக்கு ஒதுக்கிய நிதி வீடமைப்பு திட்டங்களுக்காக பயன்படுத்தப் படவில்லை என்பது மீளாய்வு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

நூறு வீடுகளுக்கு நிதி ஒதுக்கிவிட்டு ஆயிரம் வீடமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மக்களை ஏமாற்றும் திட்டம் கடந்த அரசில் முன்னெடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இங்கு ஆவணங்களுடன் சுட்டிக்காட்டினார். 2017,2018,2019 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட 96,344 வீட்டு அலகுகளுக்கான பணிகளைப் பூர்த்தி செய்ய 26,000 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்ற போதும் கடந்த நான்கரை வருடத்தில் அதற்கான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அதிகார சபை என்பவற்றுடன் தொடர்பற்ற திட்டங்களை செயற்படுத்த கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதனால் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், கடன் பெற்று சம்பளம் கொடுக்க முற்பட்டால் தொடர்ந்து நெருக்கடி நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். (பா)

 

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை