அரசியல் பழிவாங்கல்களை ஆராய விசேடகுழு நியமனம்

நல்லாட்சி அரசாங்கத்தில் மிகவும் பாரதூரமான முறையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜகத் பாலபடபெந்தி தலைமையில் விசேட அரசியல் பழிவாங்கல் ஆராய்வுக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் நெருக்கடி, தாக்குதல், பதவி நீக்கம், சாட்சியம் இல்லாமல் வழக்குத் தாக்கல் செய்தல், சிறை வைத்தல், பிணையில் விடுவிக்காமை, பதவி உயர்வு வழங்காமை, இடமாற்றம் வழங்காமை மற்றும் பழிவாங்கும் எண்ணத்தில் தூர இடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டோருக்கு இக்குழு நியாயமான தீர்வுகளைப் பெற்றுத் தருமென்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் முன்னாள் நீதியரசர் ஜகத் பாலபட்டபெந்தி தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதிகோரி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து முதல் ஓரிரு வாரங்களுக்குள்ளேயே மிகவும் பாரதூரமான அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காக அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ என் தலைமையில் விசேட குழுவொன்றை நியமித்திருந்தார்.

வாரத்துக்கு ஒரு தடவை கூடிய இக்குழுவிற்கு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்த பல அதிகாரிகள் நேரில் வந்து தமக்கு நேர்ந்த துன்பங்களை முறையிட்டுச் சென்றனர்.

இம் முறைப்பாடுகளை புதிதாக நியமிக்கவுள்ள குழுவிடம் நான் கையளிக்கவுள்ளேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான தீர்வொன்று கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை