கிழக்கு தமிழர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வியூகங்கள் அவசியம்

மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து

கிழக்கு மண்ணின் எதிர்காலத்தை கிழக்கு மக்கள் நிர்ணயிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதால், எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் தேடவேண்டுமென மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு போவிந்தன் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (27) மீன் சின்னத்துடன் மக்கள் முன்னேற்றக் கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அவர்: எமது கட்சியின் 23 காரியாலயங்களை கிழக்கில் திறக்கவுள்ளோம். தற்போது கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் பாரிய சவால்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். தமிழர்களின் குடிப்பரம்பலும், பொருளாதாரமும், இளைஞர் யுவதிகளின் எதிர்காலமும், சின்னாபின்னமாகி கேள்விக்கு உள்ளாகியுள்ளது. கிழக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு எமது கட்சி உழைக்கும்.

அரசியல் பொருளாதார, சுய நிர்ணய உரிமைகள் அனைத்தையும் ஒரு புதிய வழிப்பாதையில் நாங்கள் நிவர்த்தி செய்வோம்.புதிய அரசியல் கட்சிகளின் தேவை ஏற்படாவிடின் புதிய அரசியல் கட்சிகள் உருவாக முடியாது.

தற்போது கிழக்கு மண்ணில் பல தேவைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்வதற்குரிய அரசியல் கட்சிகள் இல்லாத நிலையில், மக்கள் முன்னேற்றக் கட்சிகள் போன்ற கட்சிகள் உருவாகின்றன. புதிய அரசியல் கட்சிகள் உருவாவதால் வாக்குககள் சிதைவடையும் என்ற கருத்துக்களுக்கு அப்பால், எமது அரசியல் நகர்வு தெளிவாக இருந்தால் வாக்குகள் ஒருபோதும் சிதைவடையாது. கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்காக தனித்து நின்று செயற்பட வேண்டும்.இதுவே தமிழ் மக்களின் இருப்புக்களைப் பாதுகாக்கும்.

எமது கட்சி கிழக்கை மையமாக வைத்தே செயற்படும். ஆனால் எமது கட்சியும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும், என்றுதான் செயற்படுகின்றது.

வடக்கு கிழக்கு இணைந்த பின்னர்தான் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்குச் சாதகமான விடயமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை