தீவிரவாத அமைப்புகளுக்கெதிராக போராடிய அதிக அனுபவத்தை கொண்டது எமது முப்படையே

உலகளாவிய ரீதியில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடி அதிகமான அனுவபத்தை இலங்கையின் முப்படையினரே கொண்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

திருக்கோணமலை விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

2009ஆம் ஆண்டு யுத்த வெற்றியை பெற்றுக்கொள்ள இலங்கை விமானப்படையின் பங்களிப்பு காத்திரமாக அமைந்திருந்தது. தோற்கடிக்க முடியாதென கூறப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை முப்படையினரின் பங்களிப்புடன் தோற்கடித்தோம். விமானப் படையின் வான் தாக்குதல்களை நடத்திய பின்னரே இராணுவத்தினர் யுத்தக்களத்தில் முன்னோக்கி    நகர்ந்தனர். இராணுவத்தினர் முன்னோக்கிப் பயணிப்பதற்கான தடைகளை விமானப் படையினரே நீக்கியிருந்தனர்.

உலகளாவிய ரீதியில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடிய விமானப் படைகளில் அதிகமான அனுவபத்தை கொண்டுள்ளது இலங்கை விமானப் படைதான். உலகில் எந்தவொரு தீவிரவாத அமைப்புக்கும் வான்வழித் தாக்குதல்களை நடத்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை.

ஈரான் மற்றும் ஈராக் நாட்டில் பாரிய நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்குக் கூட வான்வாழி தாக்குதல்களை நடத்தக் கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை. என்றாலும் புலிகள் அமைப்புக்கு மாத்திரம் அந்த வாய்ப்பு இருந்தது. வான்வழித் தாக்குதல்கள் மூலம் உலகளாவிய தீவிரவாதத்திற்கு புலிகள் அமைப்பு புதிய அனுபவமொன்றை கொடுத்திருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிறிய விமானங்கள் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இத்தகைய தாக்குதல்களுக்கு ‘குறும்பட்டி’ தாக்குதல் என அன்று கூறினர். கொலன்னாவை எண்ணெய்க் குதம், கட்டுநாயக்க விமானப் படைத் தலைமையகம் என பல இடங்களில் புலிகள் ‘குறும்பட்டி’ தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். அத் தாக்குதல்கள் வெற்றியளித்திருந்தால் நாம் பாரிய இழப்புகளை சந்தித்திருப்போம்.

புலிகளின் இவ்வாறான தாக்குதல்களை முழு உலகமே உற்றுநோக்கியது.

இச் சிறிய விமானங்களின் என்ஜின் சூட்டைகூட எமது எறிகணைகள் மூலம் கண்டறிய முடியாத வகையில் வடிவமைத்திருந்தனர். ஆகவே, உலகில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடிய அதிக அனுபவத்தை கொண்டுள்ளது எமது முப்படையேயாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 01/18/2020 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை