இலங்கை அணிக்கு சவாலான இலக்கு

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்று இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்கவுள்ளது.

ஹராரேவில் நடைபெற்றுவரும் போட்டியின் நான்காவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் சிம்பாப்வே அணி ஆட்டம் மழையால் தடைப்படும்போது 6 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்மூலம் சிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 335 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

சிம்பாப்வே அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் மத்திய வரையில் பிரண்டன் டெய்லர் 67 ஓட்டங்களை பெற்றார். சிம்பாப்வே அணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளையும் 151 ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தபோதும் டெய்லர் மற்றும் சிகந்தர் ராசா 70 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ராசா 74 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்றார். அதேபோன்று அணித்தலைவர் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இதன்போது இலங்கை சார்பில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 406 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் சீன் வில்லியம்ஸ் 107 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது முதல் இன்னிஸை ஆரம்பித்த இலங்கை அணி 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓட்டங்களால் பின்தங்கியமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் போட்டியில் ஒரு நாள் முழுமையாக எஞ்சியிருக்கும் நிலையில் இலங்கை அணி சவாலான வெற்றி இலக்கொன்றுக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை