பாடசாலைகளில் ஆங்கிலமொழி போதனா மொழியாக்கப்பட வேண்டும்

சகல மதங்களையும் கற்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தும்

அரசாங்க பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியை போதனா மொழியாகக் கற்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இதனால் சகல மதங்களையும் ஆங்கில மொழியிலே கற்பதற்கான வாய்ப்பு கிடைக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

வெலிகம, முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களைச் சேர்க்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பாடசாலை அதிபர் திருமதி ஸனூலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:

பாடசாலைகளில் இன்று சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.எனினும் ஆங்கில மொழியே போதனா மொழியாக அமைவது சிறந்ததாகும். இதன்மூலம் எல்லா மாணவர்களுக்கும் எந்த ஒரு பாடசாலைக்கும் சென்று கல்வி கற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.எமது நாட்டில் இனங்களிடையே நிலவும் வேறுபாடுகளை இல்லாதொழிக்கவும் இது வாய்ப்பாக அமையும். ஒரே பாடசாலையில் பல்வேறு இனத்தவர்கள் கல்வி கற்கக் கூடிய சந்தர்ப்பமும் இதனால் உருவாகும். மாணவர்களிடையே ஒற்றுமை, அன்னியோன்யம், சகோதரத்துவம் என்பன உருவாகவும்  இந்தக்கல்வி வழிகோலும்.    எந்த இனத்தவருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது சகல இன மக்களையும் ஒன்றாக மதித்து ஒரே மாதிரியான சேவைகளை பெற்றுக் கொடுக்கவே அரசாங்கம் விரும்புகிறது. 

கடந்த காலங்களில் எமது அரசாங்கத்தைப் பற்றி பொய்யான தவறான பிழையான கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. எதிர்காலத்திலும் இவ்வாறான கருத்துக்களை பரப்ப சிலர் முயற்சிக்கலாம். இதனை எவரும் நம்பக்கூடாது.இப்பாடசாலையின் குறைபாடுகள் பற்றி பாடசாலை அதிபர் என்னிடம் சுட்டிக்காட்டினார். கூட்ட மண்டபத்துடன் வகுப்பறைகளைக் கொண்ட மூன்றுமாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இப்பாடசாலையின் முன்னேற்றத்துக்கு  தென் மாகாண முதலமைச்சராக இருந்தகாலம் தொட்டு இன்று வரை உதவி வருகிறேன். எதிர்காலத்திலும் இப் பாடசாலை முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் மூலமும் மாகாணசபை மூலமும் உதவுவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

வெலிகம தினகரன் நிருபர்  

Wed, 01/22/2020 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை