அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது குறைந்தது மூன்று ரொக்கெட் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஒரு ரொக்கெட் தூதரகத்தின் சிற்றுண்டுச் சாலையை தாக்கியிருப்பதோடு மேலும் இரண்டு நெருங்கிய தூரத்தில் விழுந்திருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் குறைந்தது மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்புகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான தாக்குதலில் தூதரக பணியாளர்கள் காயமடைந்திருப்பது இது முதல்முறையாகும்.

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்காதபோதும் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் மீது இதற்கு முன்னர் அமெரிக்கா குற்றம்சாட்டியது.

தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் ஈராக் பிரதமர் அதல் அப்துல் மஹ்தி, தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகள் ஈராக்கை யுத்த பூமிக்கு இழுத்துச் செல்லும் என்று எச்சரித்தார்.

“எமது இராஜதந்திர வசதிகளை பாதுகாக்கும் கடப்பாட்டை நிறைவேற்றும்படி ஈராக் அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அல்லது ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ள தளங்களை இலக்கு வைத்தே அண்மைக் காலங்களில் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்க மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்திற்கு மத்தியில் ஈராக் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகள் 14க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 01/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை