ஆசிய கிண்ணம்: பாகிஸ்தான் செல்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தொடர்ந்து மறுப்பு

பாகிஸ்தானில் டி20 ஆசியக் கிண்ண போட்டி நடைபெற்றால் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று இந்திய கிரிக்கெட் சபை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பரில் டி20 ஆசிய கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவும் இப்போட்டியில் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆசிய கிண்ணத்தை நடத்த கோரப்படுகிறது.

ஆசிய கிண்ண போட்டி எங்கு நடைபெறும் என்பதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் இதர ஆட்டங்கள் பாகிஸ்தானிலும் நடத்தும் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் சபை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிய கிண்ண போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி அங்கு செல்லாது.

இந்தியாவின் பங்கேற்பு இல்லாமல் ஆசிய கிண்ணம் நடைபெறவேண்டும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம். இந்தியா அப்போட்டியில் பங்கேற்கவேண்டும் என்றால் பாகிஸ்தானில் அப்போட்டி நடைபெறக்கூடாது என்று கூறியுள்ளார்.

2018இல் ஆசிய கிண்ணம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டி நடைபெற்றது. அதேபோன்று இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆசிய கிண்ண போட்டியை நடத்த கோரப்படுகிறது.

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை