இரு தரப்புக்கும் மன்னிப்பு என்பதை ஏற்க முடியாது

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மன்னிப்பு என்பது இருதரப்புக்கும் உரியதாக இருக்க வேண்டும் எனக் கூறி தமிழ் அரசியல் கைதிகளை பிணைக் கைதிகளாக அரசாங்கம் வைத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள சுமந்திரனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கடந்த கால அரசாங்கத்துடன் பேசி குறிப்பிட்ட சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் 50 பேர் ஏற்கனவே குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டவர்கள்.

அவர்களின் விடுதலை என்பது ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் தங்கியுள்ளது. இருதரப்புக்கும் பொது மன்னிப்பு என்பதை ஏற்கமுடியாது. அல்லது அது தொடர்பில் பேசுவதில் நியாயம் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காரணம் தமிழ் அரசியல் கைதிகளும் அரச தரப்பினரையும் சமப்படுத்த முடியாது. தமிழ் அரசியல் கைதிகள் என்பவர்கள் ஏற்கனவே பல வருடம் சிறைவாசம் அனுபவிப்பவர்கள். நீதிமன்றங்களினால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள்.

ஆனால் அரச தரப்பில் இன்றுவரை எவரும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படாதுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு மன்னிப்பு என்பது இரு தரப்புக்கும் சமனாக வழங்க முடியும் என்பதை அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என்றார்.

கொக்குவில் குறுப் நிருபர்

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை