சாரணர் அமைப்பின் பிரதான உறுப்பினராக ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நியமனம்

இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்பின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் விசேட நிகழ்வுகள் பல நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்பின் தலைவர் எஸ்.பி.ஜேசுபிள்ளை தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண பிரதான சாரணர் உறுப்பினராக மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்பின் குழுவினர்களுக்கும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று அண்மையில் (24) மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்புக்கு நூறு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்ட பாடசாலை ஆசிரியர் ஆலோசகர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சாரணர் பயிற்சிகளை பெற்று கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்புக்கான பிரதான கட்டடத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்தினால் இரத்தினபுரி புதிய நகரில் காணி வழங்கப்பட்டுள்ளது. இதில் கட்டடத்தொகுதி அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபையின் உதவி கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, இரத்தினபுரி மாவட்ட எம்.ஏ.மாநாம, சாரணர் பயிற்சி ஆணையாளர் ஒசுகுல சில்வா உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை