பூநொச்சிமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் பகுதி நேர குர்ஆன் மனன பிரிவு இன்று ஆரம்பம்

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள பூநொச்சிமுனை கிராமத்தின் முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் பகுதி நேர குர்ஆன் மனனப்பிரிவு இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

தற்போது இக்கிராமத்தில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 640 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 1960ம் ஆண்டளவில் பள்ளிவாசலும் பாடசாலையும் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் கலவன் பாடசாலையாக இது ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பின்னர் இக்றஹ் வித்தியாலயமாக பெயர் மாற்றப்பட்டது. இக்கிராமத்தையும் இதனை அண்மித்த கிராமங்களையும் சேர்ந்த பிள்ளைகள் இப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர்.

இக்கிராமத்தில் 1960ம் ஆண்டு ஓலைக்குடிசையில் முகைதீன் பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஐவேளை தொழுகை இடம்பெற்றது. பின்னர் ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்பட்டு ஜும்ஆப்பள்ளிவாசலாக மாறியது.

1978ம் ஆண்டு வீசிய சூறாவளியையடுத்து இந்தப் பள்ளிவாசல் நிரந்தரக் கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டு அதிலேயே ஜும்ஆத் தொழுகை மற்றும் ஐவேளை தொழுகை குர்ஆன் மதரசா என்பன இடம்பெற்று வந்தன.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினையடுத்து இப்பள்ளிவாயல் மாடிக்கட்டடமாக நிர்மாணிப்பதற்காக அத்திரவாரமிடப்பட்டு கீழ்த் தளம் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலின் மேல் மாடியினை நிர்மாணிக்க இதன் புதிய நிருவாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

1990ல் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையினால் இக்கிராம மக்கள் காத்தான்குடிக்கு இடம்பெயர்ந்து பின்னர் மீளக்குடியேறினர். தற்போது இந்த ஜும்ஆப்பள்ளிவாசலை புதிய நிருவாகம் பொறுப்பேற்று இங்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒரு அங்கமாக இன்று 08.01.2020 புதன்கிழமையன்று பிற்பகல் 4மணிக்கு பகுதி நேர அல்குர்ஆன் மனனப் பிரிவை ஆரம்பிக்கின்றனர். இதில் சுமார் ஐம்பது மாணவர்கள் இணைந்துள்ளனர்.பள்ளிவாசலின் புதிய தலைவர் எம்.சி.ஏ.றசால்தீன், செயலாளர் முஜிபுர்ரஹ்மான், பொருளாளர் முஸ்தபா ஆகியோர் உட்பட நிருவாகிகள் இதனை வழிநடத்துகின்றனர்.

இளைஞர்கள் இதில் அதிகம் அங்கம் வகிப்பதால் இதனை மேலும் வளர்ச்சியடையச் செய்ய முயற்சித்து வருகின்றனர். இக்கிராமத்தை அண்மித்து தமிழ் மக்கள் வசிப்பதனால் இக்கிராமத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் நெடுங்காலமாக இன ஐக்கியமும் சமூக ஒற்றுமையும் காணப்படுகின்றது.

இந்தக் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள், கடற்கரை வீதி உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு தேவைகள் இக்கிராமத்தில் காணப்படுகின்றன. இந்தக் கிராமத்தில் முதல் தடவையாக பகுதி நேர அல்குர்ஆன் மனனப்பிரிவை ஆரம்பிப்பது பூநொச்சிமுனை கிராமத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

 

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை