எதையும் நான் கேட்டுப்பெற்றதில்லை; நேர்மையாகவே செயற்பட்டுள்ளேன்

என் மீது தவறான கருத்துக்கள் முன்வைப்பு

அரசாங்கத்திடம் நான் எதையும் கேட்டுப்பெற்றதில்லை எனினும் என்னைப் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்பட்ட வீடு தொடர்பில் அரச தரப்பிலிருந்தும் கூட சிலர் தவறான கூற்றுக்களை முன்வைத்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், அது சிறந்ததல்ல என்றும் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,

நான் 2018 நவம்பர் மாதம் நாட்டின் அரசியல் மாற்றங்களின் போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக நான் உபயோகித்த அரசாங்கத்தின் வளங்களை கையளித்துவிட்டேன்.

எனது உத்தியோகபூர்வ வீட்டை மத்திரமே நான் பெற்றுக்கொண்டேன். அரசாங்கத்திலேயே அது எனக்கு தரப்பட்டது. எனினும் அது தொடர்பில் தற்போது பல்வேநு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நான் இதற்கு முன்னர் ‘சமிட்’ தொடர்மாடியிலேயே வசித்து வந்தேன்.

எனக்கு 80 வயதாகும் நிலையில் எனது உடல் நிலை காரணமாகவும் அங்கு படிக்கட்டுகளில் ஏறிச் செல்வதென்பது முடியாததாலுமே அந்த உத்தியோகபூர்வ இல்லத்தைப் பெற்றுக் கொண்டேன்.

2015இல் நான் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றபோதும் 2017ஆம் ஆண்டே எனக்கு அந்த இல்லம் வழங்கப்பட்டது. அதனை 2019இல் நான் மீள திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் அதனை மீளக்கோரவில்லை எனினும் அரசாங்கமே அதனை எனக்கு வழங்கியது. எனக்கு வழங்கப்பட்ட கார் ஒன்றையும் நான் இரண்டு வருடத்தில் மீள வழங்கினேன். இதிலிருந்து எனது நேர்மை வெளிப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரா. சம்பந்தன் எம். பியின் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன பதில் வழங்கினார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை