லா லிகாவில் பார்சிலோனா முதலிடம்

சீன முன்கள வீரர் வூ லீ கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் ஸ்பெயின் லா லிகாவில் கடைசி இடத்தில் இருக்கும் எஸ்பான்யோல் அணி முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவுக்கு இடையிலான போட்டியை 2–2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டேவிட் லோபார்ஸ் தலையால் முட்டி பெற்ற கோலினால் எஸ்பான்யோல் முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது.

எனினும், இரண்டாவது பாதியில் லுவிஸ் சுவாரஸ் 50ஆவது நிமிடத்திலும் ஆர்டுல் விடால் தலையால் முட்டி 59 ஆவது நிமிடத்திலும் பெற்ற கோல்கள் மூலம் பார்சிலோனா போட்டியின் ஆதிக்கத்தை தன்வசமாக்கியது.

இந்நிலையில் மார்டியஸ் வார்கஸ் பரிமாற்றிய பந்தை பதில் வீரரான வூ 88 ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றி பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பார்சிலோனாவுக்கு எதிராக கோல் பெற்ற முதல் சீன வீரராகவும் இதன்மூலம் அவர் பதிவானார்.

எனினும் 10 நிமிட இடைவெளிக்குள் இரட்டை மஞ்சள் அட்டைகளை பெற்ற பார்சிலோனா வீரர் பிரான்கி டி ஜொங் 75 ஆவது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ்பான்யோல் அணி 2009 தொடக்கம் பார்சிலோனாவை தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா லா லிகா புள்ளிப்பட்டியலில் 40 புள்ளிகளை பெற்று கோல் வித்தியாசத்தில் அதே 40 புள்ளிகளை பெற்றிருக்கும் ரியல் மெட்ரிட்டை பின்தள்ளி முதலிடத்தில் உள்ளது.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை