ஐ.தே.க தலைமைத்துவ நெருக்கடி உக்கிரம்

சமரசம் காணும் முயற்சியில் பிக்குகள் முன்னணி

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ நெருக்கடியை சமரசமாகத் தீர்க்கும் முயற்சியில் ஐக்கிய பிக்குகள் முன்னணியின் செயலாளரும், மாளிகாகந்த மகாபோதி விகாராதிபதியுமான தினியாவல பாலித தேரர் இறங்கியுள்ளார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சமகாலத்தில் சந்தித்து சமரசம் செய்வதற்கு அவர் தீரமானித்துள்ளார். வெளிநாடு சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க நாளை 15 ஆம் திகதி நாடு திரும்பியவுடன் இரு தலைவர்களை யும் சந்திக்கவைக்க தினியாவல பாலித தேரர் திட்டமிட்டு வருகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாமென கேட்டிருக்கும் அவர், இருவரும் ஒன்றுபட்டு கட்சியை மீண்டும் பலப்படுத்துமாறும் எதிர்வரக்கூடிய பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வீரியத்தடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை எதிர்க் கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட உடக மாநாட்டின் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ஷன ராஜகருணா, பந்துலால் பண்டாரிகொட ஆகியோர் காலம் கடத்தாமல் கட்சித் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவுக்கு பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கட்சிக்குத் தலைமைத்துவக் குழு அவசியம் இல்லை. கட்சி ஆதரவாளர்கள், பெரும்பான்மையான கட்சி எம். பிக்களின் எதிர்பார்ப்பு சஜித் தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென்பதேயாகும். தற்போதைய நிலையில் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றாக பயணித்தால் மட்டுமே வரக்கூடிய தேர்தலில் வெற்றி இலக்கை அடைய முடியும். இந்த நேரத்தில் நாம் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் இணைந்து ஒற்றுமையுடன் செயற்படவேண்டிய தருணம் இது என்பதை மறந்து விடக்கூடாது. பிளவுபட்டு மற்றொரு தோல்விக்கு முகம்கொடுக்கும் நிலைக்குச் செல்லாமல், கட்சித் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எம். ஏ. எம். நிலாம்

 

Tue, 01/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை